ராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு.. கெத்து காட்டினார் கெலாட்…

ராஜஸ்தானில் கடந்த 2018 இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று பாஜகவிடம் இருந்து ஆட்சியைப் பறித்தது. அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதல்வர் சச்சின் பைலட் கடந்த மாதம் போர்க்கொடி உயர்த்தினார்.

அவரும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் தனி அணியாக செயல்பட்டனர். இதைத் தொடர்ந்து சச்சினின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.
அவர் உட்பட 19 எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்த நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் அணி நீதிமன்றத்துக்கு சென்றது. பைலட்டின் பின்னணியில் பாஜக இருப்பது தெளிவாகத் தெரிந்தது.
திடீர் திருப்பமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை, சச்சின் பைலட் டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு சந்தித்துப் பேசினார்.

சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் அசோக் கெலாட்.
சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் அசோக் கெலாட்.

இதைத் தொடர்ந்து காட்சிகள் மாறின. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் அசோக் கெலாட்டும் சச்சின் பைலட்டும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசி சமரசமாகினர்.
ஏற்கெனவே திட்டமிட்டபடி ராஜஸ்தான் சட்டப்பேரவை இன்று காலை கூடியது.

பிற்பகலில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்றது. சுமார் 3 மணி நேர விவாதத்துக்குப் பிறகு வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 124 எம்எல்ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
காங்கிரஸுக்கு சச்சின் பைலட் திரும்பி வந்ததால் அந்த கட்சிக்கு கூடுதலாக 22 எம்எல்ஏக்கள் பலம் கிடைத்துள்ளது.

சட்டப்பேரவை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சச்சின் பைலட்
சட்டப்பேரவை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த சச்சின் பைலட்


சட்டப்பேரவையில் சச்சின் பைலட்டுக்கு பின்வரிசை ஒதுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து நிருபர்களிடம் அவரிடம் கேட்டபோது, பலசாலியான வீரர் எல்லைக்கு அனுப்பப்படுகிறார். அந்த வகையில் கடைசி வரிசையில் அமர்ந்துள்ளேன்.

அரசு மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் முதல்வர் கெலாட் பேசும்போது, “சிபிஐ, அமலாக்கத் துறை மூலம் மத்தியில் ஆளும் பாஜக அரசு பழிவாங்கல் அரசியலில் ஈடுபடுகிறது. ஐனநாயகத்தை குழிதோண்டி புதைக்கிறது” என்று குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *