ராஜஸ்தான் ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் – புல் வெளியில் அமர்ந்து தர்ணா

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. காங்கிரஸில் இருந்து விலகிச் சென்றுள்ள சச்சின் பைலட் பாஜக பக்கமாக சாய்ந்து வருகிறார். சச்சின் பைலட்டையும் சேர்த்து 19 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்படுகின்றனர்.
அவர்களை தகுதிநீக்கம் செய்ய ஆளும் காங்கிரஸ் தீவிர முயற்சி செய்து வருகிறது. ஆனால் ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் சச்சின் பைலட் மீது கை வைக்க முடியாமல் காங்கிரஸ் திணறி வருகிறது.


200 எம்எல்ஏக்கள் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 101 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. காங்கிரஸ் கூட்டணியில் 102 எம்எல்ஏக்கள் உள்ளனர். குதிரை பேரத்தை தடுக்க ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முதல்வர் அசோக் கெலாட்


சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வர் அசோக் கெலாட் வலியுறுத்தி வருகிறார். ஆனால் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இருப்பதால் சட்டப்பேரவையை இப்போது கூட்டக் கூடாது என்று பாஜக வாதிட்டு வருகிறது.

இதுகுறித்து முதல்வர் கெலாட் ஜெய்ப்பூரில் இன்று நிருபர்களிடம் பேசும்போது, “மத்திய அரசின் உத்தரவுபடி ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா செயல்படுகிறார். சட்டப்பேரவையை கூட்ட மறுக்கிறார்” என்று குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள்


இந்த சூழ்நிலையில் ஜெய்ப்பூர் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் முதல்வர் அசோக் கெலாட் இன்று ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்தார். அனைவரும் பஸ்களில் ஆளுநர் மாளிகை வந்தடைந்தனர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளியே புல்வெளியில் அமர்ந்தனர். அப்போது சிலர் மெத்தை போன்ற புல்வெளியில் ஹாயாக படுத்து புரண்டனர்.


காத்திருக்க முதல்வர் அசோக் கெலாட் மட்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா சந்தித்துப் பேசினார். அப்போது சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். ஆளுநர் என்ன முடிவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *