ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அவருக்கு எதிராக துணை முதல்வர் சச்சின் பைலட் சில வாரங்களுக்கு முன்பு போர்க்கொடி உயர்த்தினார். அவரும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் டெல்லி அருகேயுள்ள மானேசர் ஓட்டலில் முகாமிட்டனர்.
சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. அவர் உள்பட 19 எம்எல்ஏக்களுக்கும் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து சச்சின் பைலட் தரப்பில் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையில் கடந்த ஆண்டு இறுதியில் 6 பிஎஸ்பி எம்எல்ஏக்கள், காங்கிரஸில் இணைந்த விவகாரத்தை அந்த கட்சியின் தலைவர் மாயாவதி இப்போது தூசி தட்டியுள்ளார். அவரது கட்சி தரப்பிலும் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.
ராஜஸ்தான் சட்டப்பேரவை சபாநாயகர் சி.பி.ஜோஷி, ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் கதவை தட்டினார். பின்னர் அந்தர் பல்டி அடித்து வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார். இப்போது ஒட்டுமொத்த கவனமும் ஐகோர்ட் பக்கம் திரும்பியுள்ளது.
ராஜஸ்தான் சட்டப்பேரவையின் பலம் 200. இதில் பெரும்பான்மையை நிரூபிக்க 101 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
காங்கிரஸிடம் 107 எம்எல்ஏக்களின் பலம் இருந்தது. இதில் 19 எம்எல்ஏக்கள் பிரிந்து சென்றிருப்பதால் அந்த கட்சியின் பலம் 88 ஆகக் குறைந்திருக்கிறது. 10 சுயேச்சை எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் -2, பாரதிய பழங்குடி கட்சி 2 என சிறிய கட்சிகளை சேர்ந்த 4 எம்ஏக்கக்கள் காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கின்றனர்.

இவர்களை தக்க வைப்பது முதல்வர் அசோக் கெலாட்டுக்கு மிகப்பெரிய சவால் என்று கூறப்படுகிறது.
பாஜகவிடம் 72 எம்எல்ஏக்கள், அதன் கூட்டணி கட்சியான ஆர்எல்பியிடம் 3 எம்எல்ஏக்கள் உள்ளனர். சச்சின் பைலட் அணியை சேர்ந்த 19 எம்எல்ஏக்கள் பாஜகவின் நிழலில் எங்கேயோ தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அவர்களும், 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் பாஜகவின் விசுவாசிகள் என்பது உறுதியாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக பாஜகவுக்கு 97 எம்எல்ஏக்களின் பலம் உள்ளது.
சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் முதல்வர் அசோக் கெலாட் பல வாரங்களாக அரசியல் யுத்தம் நடத்தி வருகிறார்.
நீண்ட போராட்டத்துக்குப் பிறகு வரும் 14-ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது. இதன்பின் வரும் 17-ம் தேதி பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிகிறது.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் அசோக் கெலாட் கெத்து காட்டி ஜெயிப்பாரா இல்லை பலிகடா ஆவாரா என்பது தெரியவரும்.