ராஜஸ்தான் அரசியலில் புதிய திருப்பம் – தனிக்கட்சி தொடங்குகிறார் சச்சின் பைலட்

ராஜஸ்தான் அரசியலில் புதிய திருப்பமாக அந்த மாநில துணை முதல்வர் சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


கடந்த 2018 இறுதியில் ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போதே முதல்வர் பதவிக்கு அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.


அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின்படி முதல்வராக அசோக் கெலாட்டும் துணை முதல்வராக சச்சின் பைலட்டும் பதவி ஏற்றனர். இருப்பினும் ஆரம்பம் முதலே இருவருக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது.


ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு ரூ.25 கோடி கொடுத்து இழுக்க பாஜக சதி செய்து வருவதாக முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டினார். குறிப்பிட்ட 3 சுயேச்சை எம்எல்ஏக்கள், பாஜக சார்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.


இதுதொடர்பாக காங்கிரஸ் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் தரப்பில் 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் மற்றும் சச்சின் பைலட் உள்ளிட்டோர் நேரில் விளக்ககக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


இதனால் ஆத்திரமடைந்த சச்சின் பைலட், தனது ஆதரவாளர்களுடன் டெல்லி அருகேயுள்ள குருகிராமில் உள்ள ஓட்டலில் முகாமிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு பாஜக மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவை சந்தித்துப் பேசினார்.


இதனிடையே ஜெய்ப்பூரில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தை சச்சின் பைலட்டும் ஆதரவு எம்எல்ஏக்களும் புறக்கணித்தனர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் இன்று காலையும் நடைபெற்றது. இந்த கூட்டத்தையும் சச்சின் பைலட் புறக்கணித்தார்.


இப்போதைய நிலையில் பாஜகவில் சச்சின் பைலட் இணையமாட்டார் என்றும் தனியாக கட்சி தொடங்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜஸ்தான் அரசியலில் நாள்தோறும் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *