ராஜஸ்தானில் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட் இடையேயான மோதல் முற்றி வருகிறது.
ராஜஸ்தானில் கடந்த 2018-ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக அசோக் கெலாட்டும் துணை முதல்வராக சச்சின் பைலட்டும் பொறுப்பேற்றனர். ஆரம்பம் முதலே இருவருக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக சச்சின் பைலட் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார். அவர் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் டெல்லி அருகேயுள்ள குருகிராமில் உள்ள ஓட்டலில் முகாமிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து ஜெய்ப்பூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்க கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் சச்சின் பைலட்டின் ஆதரவாளர்களான 20 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
அசோக் கெலாட்டின் எம்எல்ஏக்கள் அனைவரும் ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அரசுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. 109 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள் கூறுகையில், “முதல்வர் அசோக் கெலாட் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. அவருடன் 80 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்” என்று தெரிவித்தனர்.

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 200 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் பெரும்பான்மையை நிரூபிக்க 101 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. முதல்வர் அசோக் கெலாட் பெரும்பான்மையை இழந்துவிட்டதால் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பாஜகவுக்கு 72 எம்எல்ஏக்களும் அதன் கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக் தந்தரிக் கட்சிக்கு 3 எம்எல்ஏக்களும் உள்ளனர். காங்கிரஸுக்கு தற்போது ஆதரவு அளிக்கும் 12 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு அணி மாறக்கூடும் என்று கூறப்படுகிறது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி தப்புமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.