கடந்த 2018-ம் ஆண்டில் ராஜஸ்தானில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியைப் பறித்தது. புதிய முதல்வராக மூத்த தலைவர் அசோக் கெலாட்டும் துணை முதல்வராக இளம் தலைவர் சச்சின் பைலட்டும் பதவியேற்றனர்.
ஆரம்பம் முதலே இருவருக்கும் இடையே முட்டல், மோதல்.
சில வாரங்களுக்கு முன்பு சச்சின் பைலட்டும் அவரது ஆதரவாளர்களும் தனி அணியாக பிரிந்து சென்று டெல்லி அருகே மானேசரில் உள்ள ஓட்டலில் முகாமிட்டனர். ஆட்சி அஸ்திவாரம் ஆடத் தொடங்கியதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
கொறடா உத்தரவு பிறப்பித்தும் சச்சின் பைலட்டும் அவரது ஆதரவாளர்களும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதைத் தொடர்ந்து பைலட்டின் துணை முதல்வர், மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களுக்கும் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

பைலட் அணியை சேர்ந்த 19 எம்எல்ஏக்களும் தகுதி நீக்க நோட்டீஸை எதிர்த்து ராஜஸ்தான் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதை எதிர்த்து சபாநாயகர் ஜோஷி சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றார். பின்னர் வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார்.
இதற்கிடையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, பழைய பிரச்சினையை தூசி தட்டினார். அதாவது ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலின்போது பகுஜன் சமாஜ் சார்பில் 6 எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டனர். காங்கிரஸ் கூட்டணியில் பகுஜன் சமாஜும் அங்கம் வகித்தது. கடந்த 2019 இறுதியில் பகுஜன் சமாஜின் 6 எம்எல்ஏக்களும் காங்கிரஸில் ஐக்கியமாகினர்.
பல மாதங்களுக்குப் பிறகு இந்த பிரச்சினையை கிளப்பியுள்ள பகுஜன் சமாஜ், ராஜஸ்தான் ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளது.
ஒருபுறம் சட்டப் போராட்டம் நடக்க, உடனடியாக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் முதல்வர் அசோக் கெலாட் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
முதல்வர் கெலாட்டிடம் தற்போது 88 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் (பகுஜன் சமாஜின் 6 எம்எல்ஏக்களும் சேர்த்து) 10 சுயேச்சை எம்எல்ஏக்களும், மார்க்சிஸ்ட், பாரதிய பழங்குடி கட்சி தலா 2 என மொத்தம் 102 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
மொத்தம் 200 எம்எல்ஏக்கள் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 101 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

கைவசம் இருக்கும் 102 பேரில் ஒரு சிலரை பாஜக இழுத்துவிட்டால்கூட காங்கிரஸின் ஆட்சி கவிழ்ந்துவிடும்.
வரும் ஆகஸ்ட் 14-ம் தேதிதான் சட்டப்பேரவையை கூட்டுவேன் என்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா அழுத்தமாக கூறிவிட்டார். அதுவரை முதல்வர் அசோக் கெலாட் தனது இரும்பு கோட்டைக்குள் வைத்து 102 எம்எல்ஏக்களையும் பாதுகாக்க வேண்டும்.
இல்லையெனில் சில எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் தாவிடும் அபாயம் உள்ளது.
சச்சின் பைலட் ஆதரவாளர்கள் இந்தியாவில்தான் இருக்கிறார்களா என்று சந்தேகப்படும் வகையில் எங்கேயோ பாஜக பாதுகாப்பில் பத்திரமாக உள்ளனர். ஹரியாணாவுக்கு அவர்களை தேடி போன ராஜஸ்தான் போலீஸார் வெறும் கையோடு ஜெய்ப்பூர் திரும்பிவிட்டனர்.
ராஜஸ்தானின் பாஜகவுக்கு 72 எம்எல்ஏக்களும் அதன் கூட்டணி கட்சியான ஆர்எல்பிக்கு 3 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவின் நிழலாக செயல்படும் சச்சின் பைலட் அணியில் 19 எம்எல்ஏக்கள் உள்ளனர். 3 சுயேச்சைகளும் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர். இப்போதைக்கு பாஜகவிடம் 97 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இதில் பைலட் அணியின் 19 எம்எல்ஏக்களும் செல்லும் ஓட்டுகளா, செல்லாத ஓட்டுகளா என்பது நீதிமன்றத்தின் கையில் உள்ளது.
ஒட்டுமொத்தமாக ராஜஸ்தான் அரசியல் கலங்கிய குட்டையாக காட்சியளிக்கிறது. அதில் எம்எல்ஏக்கள் எனும் மீன்களைப் பிடிக்க மாநிலத்தில் ஆளும் காங்கிரஸும் மத்தியில் ஆளும் பாஜகவும் போட்டா போட்டியில் ஈடுபட்டுள்ளன.