ராஜஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம் – பைலட்டுக்கு எதிராக சபாநாயகர் வழக்கு

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தினார். இதன்காரணமாக சச்சின் பைலட்டின் துணை முதல்வர், மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.


சச்சின் பைலட், அவரது ஆதரவாளர்கள் என 19 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்படுகின்றனர். கொறடா உத்தரவு பிறப்பித்தும் காங்கிரஸ் சட்டப்பேரவை கூட்டத்தில் 19 பேரும் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் கேட்டுக் கொண்டதன்பேரில் 19 பேருக்கும் தகுதி நீக்க நோட்டீஸை சட்டப்பேரவை சபாநாயகர் ஜோஷி அண்மையில் அனுப்பினார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது வீட்டில் ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்துகிறார்


இதை எதிர்த்து சச்சின் அணி தரப்பில் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, 19 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் வரும் 24-ம் தேதி வரை சபாநாயகர் எவ்வித முடிவும் எடுக்கக்கூடாது. குறிப்பாக அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


ராஜஸ்தான் அரசியல் சூடுபிடிக்கும் நிலையில் சட்டப்பேரவை சபாநாயகர் ஜோஷி, ஜெய்ப்பூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், “சபாநாயகரின் அதிகாரம் வானளாவியது. எம்எல்ஏக்களுக்கு தகுதி நீக்கம் நோட்டீஸ் அனுப்பவும், நடவடிக்கை எடுக்கவும் எனக்கு அதிகாரம் இருக்கிறது. ராஜஸ்தான் ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். எனது வழக்கறிஞர் மனுவை தாக்கல் செய்வார்” என்று தெரிவித்தார்.

தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சச்சின் பைலட்


சபாநாயகர் ஜோஷி தரப்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவார் என்று அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


ராஜஸ்தான் சட்டப்பேரவையின் பலம் 200 ஆகும். இதில் பெரும்பான்மையை நிரூபிக்க 101 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் காங்கிரஸ் கூட்டணியில் இப்போது 102 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதில் சிலரை பாஜக இழுத்துவிட்டால் காங்கிரஸ் அரசு கவிழ்ந்துவிடும்.


சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களும் தகுதிநீக்கம் செய்யப்பட்டால் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பலம் பெறும். நம்பிக்கை வாக்கெடுப்பில் மிக எளிதாக வெற்றி பெற முடியும். இதன்காரணமாகவே ஐகோர்ட் தீர்ப்பு வழங்கும் முன்பாகவே சபாநாயகர் ஜோஷி, சுப்ரீம் கோர்ட் கதவை தட்டுகிறார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *