பாடும் நிலை.. எழுந்து வா.. கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்.. எஸ்.பி.பி.யை மீட்டெடுப்போம் என்று நடிகர் ரஜினி காந்த் உருக்கமான அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 14-ம் தேதி முதல் அவரது உடல்நிலை மோசமாக உள்ளது. உயிர் காக்கும் கருவிகளுடன் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எஸ்.பி.பி. விரைவில் குணமடைய நாடு முழுவதும் பல்வேறு பிரபலங்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். லட்சக்கணக்கான அவரது ரசிகர்கள் வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டி இன்று மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்தபடியே நடிகர், நடிகைள் பங்கேற்கும் மவுன கூட்டு பிரார்த்தனை நடக்கிறது.
இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், இயக்குநர் பாரதிராஜா உள்பட திரையுலக பிரபலங்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.
எஸ்.பி.பி.யை மீட்டு வர அவர் பாடிய பாடல்களை இன்று மாலை 6 மணிக்கு ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினி காந்த் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “பாடும் நிலா.. எழுந்து வா! கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்..
எஸ்.பி.பியை மீட்டெடுப்பும் 20-08-2020 இன்று மாலை 6 மணி முதல் 6.05 வரை கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் நடிகர் ரஜினி காந்த் கையெழுத்திட்டுள்ளார்.
எஸ்பிபியை நினைவுகூர்ந்து நடிகர் பார்த்திபன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
“தமிழர் மரபில் குழந்தைகளுக்குக் காதுக் குத்துதல் ஒரு சடங்கு. அப்படி எஸ்.பி.பி.யின் குரலால் காதுக் குத்தப்பட்டவர்கள்தான் நாம் அனைவரும்.
நாற்பது வருடங்களுக்கும் மேலாக நம் இதய கிழிசல்களை தன் குரல் இழைகளால் நூற்பதும், வயது கடந்தும் காதல் வசம் நம்மை ஈர்ப்பதும் எஸ்.பி.பி.யின் இளமை ததும்பும் பாடல்களே! காற்றில் கலந்துள்ள ஈரப்பதத்தை விட, எஸ்.பி.பி.யின் குரல் பத சதவிகிதம் கூடுதலே.
பூமி சுழற்சியின் ஒவ்வொரு நிமிட காரணக்காரியங்கள் நமக்கு தெரியாது ஆனால், இன்று மாலை 6 மணிக்கு, அந்த ஒரு நிமிடம் மட்டும் உலகமே ஒரு புள்ளி நோக்கி…
இசையுலகின் பெரும்புள்ளி நோக்கி… அவர் மீண்டு வந்து, நாம் மீண்டு வர இயலா மகிழ்ச்சியில் ஆழ்த்த, நம் இதயங்குவித்து பிரார்த்தனை செய்வோம்” என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.