பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுக்க 2 ஆண்டு காலதாமதம் ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி

பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்க 2 ஆண்டுகள் காலதாமதம் ஏன் என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் மனித வெடிகுண்டால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனையும், ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரலில் நளினியின் தூக்கு தண்டனையை தமிழக ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆயுள் தண்டனையாக குறைத்தார். கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், கருணை மனுவை பரிசீலிக்க 11 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது தவறு என்று கூறி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.

பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு 7 பேரின் விடுதலை தொடர்பாக  கடந்த 2018 செப்டம்பரில் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அந்த தீர்மானம் தொடர்பாக தமிழக ஆளுநர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், அஜய் ரஸ்டோகி, ஹேமந்த் குப்தா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பேரறிவாளன் சார்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜரானார். அவர் கூறும்போது, “தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்கவில்லை, நிலோபர் நிஷா வழக்கு தீர்ப்பின் அடிப்படையில் பேரறிவாளனை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றமே உத்தரவிடலாம்” என்று தெரிவித்தார்.

தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாலாஜி ஸ்ரீநிவாசன் கூறும்போது, “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மிகப்பெரிய சதி உள்ளது. சிபிஐ அமைப்பின் பன்நோக்கு ஒழுங்குமுறை கண்காணிப்பு குழு அறிக்கை அளிக்க வேண்டும். சிபிஐ அறிக்கை அளிக்கும்வரை எந்த முடிவும் எடுப்பதில்லை என்பது ஆளுநரின் நிலைப்பாடாக உள்ளது” என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ் வாதிடும்போது, “ராஜீவ் காந்தி கொலை வழக்கின் பின்னணியில் மிகப்பெரிய சதித்திட்டங்கள் உள்ளன. இந்த வழக்கு விசாரணை பிரிட்டன், இலங்கை நாடுகள் வரை நீள்கிறது. அந்த நாடுகளின் புலனாய்வு அமைப்புகளின் பதிலுக்காக காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் முக்கிய  உத்தரவைப் பிறப்பித்தனர்.

“ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளது,  வெளிநாடுகளின் தொடர்பு உள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.  வெளிநாட்டு சதியை கண்டுபிடித்து சுமார் 20 ஆண்டுகளாகியும் பிரிட்டன், பாங்காங்கில் இருந்து இன்னமும் பதில் கிடைக்கவில்லையா? வழக்கு விசாரணை இன்னமும் இந்த நிலையில்தான் உள்ளதா?  கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேருக்கும் வெளிநாட்டு சதிக்கும் என்ன தொடர்பு உள்ளது?

இப்போதைய நிலையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. எனினும் தமிழக அரசின் பரிந்துரை மீது 2 ஆண்டுகளாகியும் ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காமல் இருப்பது அதிருப்தி அளிக்கிறது. இந்த வழக்கில் அரசு தரப்பும், மனுதாரர் தரப்பும் விரிவான தகவல்களை தாக்கல் செய்யலாம். வழக்கின் அடுத்த விசாரணை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *