இந்தியா, சீனா இடையே சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை…

இந்தியா, சீனா இடையே சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை… என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் குற்றச்சாட்டினார்.

கடந்த மே மாதம் முதல் லடாக் எல்லையில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயற்சி செய்து வருகின்றனர். இதன்காரணமாக கடந்த 4 மாதங்களாக இந்தியா, சீனா இடையே போர் பதற்றம் நீடிக்கிறது.

இதன்பின் கடந்த 10-ம் தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் சந்தித்துப் பேசினர்.

அப்போது எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண 5 அம்ச திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்பிறகும் லடாக் எல்லை நிலவரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

ராஜ்நாத் சிங் விளக்கம்

இந்த பின்னணியில், இந்திய, சீன எல்லை பிரச்சினை குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் இன்று விரிவான விளக்கம் அளித்தார்.

“எல்லைப் பிரச்சினையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இதுவரை சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. லடாக்கில் சுமார் 38,000 சதுர கி.மீ. பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது.

சீனா, பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 5,180 சதுர கி.மீ. பரப்பளவையும் சீனா ஆக்கிரமித்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளிலும், உட்பகுதிகளிலும் சீன ராணுவ வீரர்களும் ராணுவ தளவாடங்களும் குவிக்கப்பட்டுள்ளன. கோக்ரா, கோங்கா லா, பான்காங் ஏரி வடக்கு, தெற்கு கரைப் பகுதிகளில் பதற்றம் நீடிக்கிறது.

சீன ராணுவத்தில் உயிரிழப்பு

கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் சீன ராணுவ தரப்பில் பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

மக்களவையில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
மக்களவையில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

இந்திய தரப்பில் கர்னல் சந்தோஷ் பாபு உட்பட 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அவர்களின் தியாகத்துக்கு தலைவணங்குகிறேன்.

பிரதமர் நரேந்திர மோடி லடாக் எல்லைக்கு நேரில் சென்று வீரர்கள் மத்தியில் பேசினார். இதன்மூலம் வீரர்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. இந்திய வீரர்களின் வீரத்துக்கு ஈடு இணையே கிடையாது. ராணுவத்துக்கு பின்னால் ஒட்டுமொத்த நாடும் ஓரணியில் திரண்டு நிற்கிறது.

மாஸ்கோவில் சீன பாதுகாப்புத் துறை அமைச்சரை நான் சந்தித்துப் பேசியபோது, இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்தேன்.

எல்லைப் பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காணவே இந்தியா விரும்புகிறது. அதேநேரம் இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் எழுந்தால் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை.

சீனாவின் ஊடுருவல் முயற்சி

எல்லையில் இந்தியா அமைதியை விரும்புகிறது. ஆனால் இருதரப்பு ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகளை சீனா மதித்து நடப்பதாக தெரியவில்லை.

கடந்த 1993 மற்றும் 1996-ம் ஆண்டுகளில் சீனாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களின்படி எல்லையில் வீரர்களை குவிக்கக்கூடாது. ஆனால் சீனா ஒப்பந்தத்தை மீறி செயல்படுகிறது.

ஒருதலைப்பட்சமாக எல்லைக்கோட்டை மாற்ற சீனா முயற்சி செய்கிறது. இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. கடந்த 29, 30-ம் தேதிகளில் லடாக்கின் பான்காங் ஏரியின் தெற்குப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயற்சி செய்தனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

சீன வீரர்களின் ஊருடுவல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து தடுத்து நிறுத்தி வருகிறது. எல்லையில் சீன ராணுவத்தின் செயல்பாட்டை பொறுத்தே இருநாடுகளின் உறவு அமையும்” என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

லடாக் எல்லை நிலவரம் குறித்து மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *