ராமர் கோவில் பூமி பூஜை.. அயோத்தியில் விண்ணை பிளக்கிறது ஜெய் ஸ்ரீராம் முழக்கம்…

அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என்று கடந்த 2019 நவம்பரில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அதன்படி கோவில் கட்டுமானத்துக்காக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, ஆரம்ப கட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.
இன்று காலை டெல்லியில் இருந்து ராணுவ சிறப்பு விமானத்தில் புறப்பட்ட அவர் உத்தர பிரதேச தலைநகர் லக்னோ வந்தடைந்தார்.. அங்கிருந்து எம்ஐ7 ஹெலிகாப்டரில் புறப்பட்டு அயோத்தியை சென்றடைந்தார்.

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜைக்காக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடை, பந்தல்.
அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜைக்காக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடை, பந்தல்.

அயோத்தியில் கால் பதித்ததும் அங்குள்ள பிரசித்தி பெற்ற ஹனுமர் கோயிலில் பிரதமர் மோடி 7 நிமிடங்கள் வழிபாடு செய்தார்.
பின்னர் அங்கிருந்து ராமர் கோயில் பூமி பூஜை நடைபெறும் பகுதிக்கு சென்றார். அயோத்தியின் சாகேத் கல்லூரியில் இருந்து ராமஜென்ம பூமி பகுதிக்கு வாகனத்தில் ஊர்வலமாக சென்ற அவருக்கு உள்ளூர் மக்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர்.


மதியம் பூமி பூஜை தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். பூஜைக்கு பிறகு பாரிஜாத மரத்தை நட்டு, ராமர் பெயரில் சிறப்பு தபால் தலையை பிரதமர் வெளியிடுகிறார்.
பூமி பூஜைக்கு பிறகு பிரதமர் மோடி முக்கிய உரை நிகழ்த்த உள்ளார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தும் உரையாற்றுகிறார்.

ராமர் கோவில் பூமி பூஜையையொட்டி நேற்றிரவு வண்ண விளக்குகளால் ஜொலித்த பூஜை
ராமர் கோவில் பூமி பூஜையையொட்டி நேற்றிரவு வண்ண விளக்குகளால் ஜொலித்த பூஜை

சுமார் 3 மணி நேரம் பிரதமர் மோடி அயோத்தியில் தங்கியிருப்பார். பிரதமரின் வருகையையொட்டி அயோத்தி நகரின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பூமி பூஜையில் பங்கேற்க சுமார் 150 பேருக்கு மட்டும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த அழைப்பிதழில் பிரத்யேக ’சிப்’ பொருத்தப்பட்டுள்ளது.

விருந்தினர்கள் விழா பந்தலில் நுழையும்போது சிப் மூலம் அடையாளம் காணப்பட்டு அனுமதிக்கப்படுவர்.
இந்த சிப் மூலம் ஒருமுறை மட்டுமே உள்ளே நுழைய முடியும். வெளியே சென்றுவிட்டு மீண்டும் விழா பந்தலுக்குள் நுழைய முடியாது.

ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதான இடத்தில் ராம் லல்லா (குழந்தை ராமர்).
ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதான இடத்தில் ராம் லல்லா (குழந்தை ராமர்).

பூமி பூஜை பந்தலுக்குள் செல்போன் உட்பட அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சுமார் 6 அடி இடைவெளியில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் காணொலி வாயிலாக பூமி பூஜையில் பங்கேற்கின்றனர்.அயோத்தி முழுவதும் ஜெய் ஸ்ரீராம் முழக்கம் விண்ணை பிளக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *