அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த 2019 நவம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து கோயில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ள இந்த அறக்கட்டளை கோயில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தலைவராக சுவாமி நிருத்ய கோபால் தாஸ் (வயது 82) செயல்படுகிறார். அவரோடு சேர்த்து மொத்தம் 15 உறுப்பினர்கள் அறக்கட்டளையில் உள்ளனர்.
கடந்த 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் நிருத்ய கோபால் தாஸ் பங்கேற்றார். தற்போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பூமி பூஜை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இதன்காரணமாக பரபரப்பு தொற்றியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், அர்ஜுன் ராம் மேக்வால், ஸ்ரீபாத் நாயக் ஆகியோருக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.