வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று ராமர் கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த 2019 நவம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக புதிய அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.
அதன் தலைவராக நிரித்ய கோபால் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது தலைமையில் அறக்கட்டளை உறுப்பினர்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
வரும் 29-ம் தேதி அல்லது ஆகஸ்ட் 5, 3-ம் தேதி ராமர் கோயில் கட்டுமான பணியை தொடங்கலாம் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பூமி பூஜையை தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 3 தேதிகளும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன.
இதில் பிரதமர் அலுவலகம் ஆகஸ்ட் 5-ம் தேதியை தேர்வு செய்துள்ளது. இதன்படி வரும் 5-ம் தேதி ராமர் கோயில் கட்டுமான பணி தொடங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடி பூமி பூஜையை தொடங்கிவைப்பார் என்று அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.