ராமர் கோயில் பூமி பூஜை.. இக்பாலுக்கு முதல் அழைப்பிதழ்! இவருக்கு ஏன் முதல் அழைப்பு?

அயோத்தி
ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்க, எதிர் மனுதாரர் இக்பால் அன்சாரிக்கு முதல் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. இதை பெற்றுக் கொண்ட அவர், இது பகவான் ராமரின் விருப்பம், பூமி பூஜையில் பங்கேற்பேன் என்று தெரிவித்தார்.


அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த 2019 நவம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, ராஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை மும்முரம் காட்டி வருகிறது.

இக்பால் அன்சாரியின் தந்தை ஹசீம் அன்சாரி
இக்பால் அன்சாரியின் தந்தை ஹசீம் அன்சாரி


கோயில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நாளை நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். நாடு முழுவதும் சுமார் 180 ஆன்மிக தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.


இதில் முதல் அழைப்பிதழ், ராம ஜென்ம பூமி வழக்கின் பிரதான மனுதாரர் இக்பால் அன்சாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பிதழை பெற்றுக் கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எனக்கு முதல் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இது பகவான் ராமரின் விருப்பம். அழைப்பை ஏற்று பூமி பூஜையில் பங்கேற்பேன்.

அயோத்தியில் இந்துக்களும் முஸ்லிம்களும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ்கின்றனர். இது புண்ணிய பூமி. ராமர் கோயில் பூமி பூஜைக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் வருகை தருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டிய பிறகு நகரம் அழகாக மாறும். உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள்.

ராமர் கோயில் பூமி பூஜைக்கான அழைப்பிதழ்.
ராமர் கோயில் பூமி பூஜைக்கான அழைப்பிதழ்.

உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ராமஜென்ம பூமி வழக்கில் கடந்த 1961-ம் ஆண்டில் உத்தர பிரதேசத்தின் பைசாபாத் நீதிமன்றத்தில் சன்னி வக்பு வாரியம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வக்பு வாரியத்தின் சார்பில் இக்பால் அன்சாரியின் தந்தை ஹசீம் அன்சாரி உட்பட 6 பேர் மனுவை தாக்கல் செய்தனர். பைசாபாத் நீதிமன்றம், அலகாபாத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என அவர் வழக்கை தொடர்ந்து நடத்தி வந்தார். கடந்த 2016-ம் ஆண்டில் தனது 95-வது வயதில் அவர் உயிரிழந்தார்.

அவருக்குப் பதிலாக அவரது மகன் இக்பால் அன்சாரி வழக்கின் பிரதான மனுதாரராக சேர்க்கப்பட்டார். எதிர் மனுதாரரான அவருக்கு ராமர் கோயில் பூமி பூஜையின் முதல் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *