பிரம்மாண்டம்..பிரமாதம்..தெய்வீகம்.. நாகரா பாணியில் ராமர் கோவில்…

குஜராத்தின் சோம்புரா குடும்பத்தை சேர்ந்த வாரிசுகள், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பொறுப்பை ஏற்றுள்ளனர். இந்த குடும்பத்தினர் கடந்த 15 தலைமுறைகளாக பிரம்மாண்ட இந்து கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சோமநாதர் கோவில் உட்பட இந்தியா முழுவதும் சுமார் 131-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட கோவில்களை இந்த குடும்பத்தினர் கட்டி எழுப்பியுள்ளனர்.
குஜராத்தின் சோம்புரா குடும்பத்தை சேர்ந்த சந்திரகாந்த் சோம்புரா (77) தலைமையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுகிறது.

அவரது மகன் ஆசிஷ் சோம்புரா கோவில் கட்டுமானம் குறித்து விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
“வடமாநிலத்தின் நாகரா கட்டுமானக் கலையில் ராமர் கோவில் கட்டப்பட உள்ளது. 3 மாடிகள், 5 குவிமாடங்கள், பிரம்மாண்ட கோபுரத்துடன் கோவில் எழுப்பப்படும்.


360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் கோவில் கம்பீரமாக காட்சியளிக்கும். முதல் மாடியில் 160 தூண்கள், 2-வது மாடியில் 132 தூண்கள், 3-வது மாடியில் 72 தூண்கள் என மொத்தம் 360 தூண்கள் கோவிலை தாங்கி நிற்கும். கோவிலின் கருவறை, எண் கோண வடிவில் கட்டப்படும்” என்று ஆசிஷ் சோம்புரா கூறியுள்ளார்.


ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கு தலைமை ஏற்றிருக்கும் சந்திரகாந்த் சோம்புரா கூறும்போது, வாஸ்து சாஸ்திர வழிகாட்டுதலின்படி ராமர் கோவில் தெய்வீக கலையுடன் கட்டப்படும்” என்றார்.
அயோத்தி ராமர் கோயிலின் 3டி மாதிரியை, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ஏற்கெனவே வெளியிட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து அறக்கட்டளையின் ட்விட்டர் பக்கத்தில் வெவ்வேறு கோணங்களில் கோவிலின் புதிய 3 டி படங்கள் வெளியிடப்பட்டன.”அயோத்தி ராமர் கோயில் இந்திய கட்டிடக் கலையின் தனித்துவமாக விளங்கும்” என்று அறக்கட்டளை பூரிப்பை வெளியிட்டுள்ளது.


பிரம்மாண்ட ராமர் கோவிலை சுற்றி 4 சிறிய கோவில்களும் கட்டப்பட உள்ளன. சுமார் 3 முதல் மூன்றரை ஆண்டுகளில் கோவில் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *