ராமநாதபுரத்தில் 100 பெண்களின் ஆபாச வீடியோக்கள் – any desk ஆப்ஸ் கொடுத்த அதிர்ச்சி

ராமநாதபுரத்தில் செல்போன் ரீசார்ஜ் கடையில் வேலை பார்த்த சகாபுதீனின் செல்போனில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன. அந்த வீடியோக்களை சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அனுப்பி லட்சக்கணக்கில் பணத்தை பறித்த கும்பல் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.


ராமநாதபுரம் எஸ்.பி வருண்குமாரை செல்போனில் தொடர்பு கொண்ட ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த 38 வயது பெண் ஒருவர், தனக்கு மகனும் மகளும் உள்ளனர். நான் கணவரால் கைவிடப்பட்ட பெண். குழந்தைகளுடன் வசித்து வருகிறேன்.

என்னுடைய செல்போன் எண்ணை ரீசார்ஜ் செய்ய கடைக்குச் சென்றபோது சகாபுதீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போனில் பேசினோம். அப்போது என்னுடைய குடும்ப சூழலை தெரிந்துக் கொண்ட சகாபுதீன், என்னை 2-வதாக திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். அதை நம்பி நானும் அவரும் நேரில் அடிக்கடி சந்தித்தோம்.


ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு சகாபுதீன் என்னை அழைத்துச் செல்வார். நானும் அவரும் தனிமையில் சந்தோஷமாக இருந்தோம். இது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது. இந்தச் சமயத்தில் என்னுடைய வாட்ஸ்அப் நம்பருக்கு நானும் சகாபுதீனும் நெருக்கமாக இருக்கும் வீடியோ தெரியாத ஒரு நம்பரிலிருந்து வந்திருந்தது. நான் அதிர்ச்சியடைந்தேன்.

அந்த வீடியோ வந்த சில நிமிடங்களில் பிரைவேட் நம்பர் என்று வெளிநாட்டிலிருந்து ஒரு போன் கால் வந்தது. அந்தப் போன் அழைப்பை நான் எடுக்கவில்லை. தொடர்ந்து போன் கால் வந்தது.


நான் அதை எடுக்காததால் என்னுடைய செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் போன் காலை எடுக்கவில்லையென்றால் உனக்கு வந்த இந்த வீடியோ ராமநாபுரம் மாவட்டம் முழுவதும் அனுப்பிவிடுவேன் என்று குறிப்பிடப்பட்டது. அடுத்து வந்த போன் காலை எடுத்து பேசியபோது, நீயும் சகாபுதீனும் காட்டுப்பகுதியில் தனிமையில் இருந்த வீடியோக்கள் என்னிடம் உள்ளன. அதனால் நான் கேட்கும் பணத்தை நீ கொடு, இல்லையென்றால் வீடியோவை பரப்பி விடுவேன் என்று மிரட்டும் தொனியில் எதிர்முனையில் பேசினார்.


அப்போது என்னிடம் பணம் இல்லை, ப்ளீஸ் வீடியோவை அனுப்பிவிடாதீங்க என்று கெஞ்சினேன். ஆனால் பணத்துக்கு ஏற்பாடு செய், எங்கு வந்து பணத்தை தர வேண்டும் என்று போன் செய்கிறேன் என்று கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார்.


உடனடியாக சகாபுதீனிடம் போனில் தகவலைத் தெரிவித்தேன். அவரும் உடனே நேரில் வரும்படி என்னிடம் கூறினார். வீடியோவை பார்த்த அவரின் முகத்தில் பதற்றம் தெரியவில்லை. என்ன செய்யலாம் என சகாபுதீனிடம் கேட்டபோது அவர்கள் கேட்ட பணத்தை கொடுப்பதை தவிர வேறு வழியில்லை என்று கூறினார். உடனே பணத்துக்கு நான் எங்கு போவேன் என்று சகாபுதீனிடம் கேட்டேன். அதற்கு அவர் யோசித்து முடிவெடுப்போம் என்று தெரிவித்தார். அதன்பிறகும் எனக்கு மிரட்டல் போன் கால்கள் வந்தன. அதனால் நான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் உள்ளேன்.


சில தினங்களுக்கு முன் இன்ஸ்ட்ராகிராமில் பழகி பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்த செய்தியை படித்தப் பிறகுதான் புகாரளிக்கிறேன் என்று கூறினார்.


அந்தப் பெண்ணின் சோகக்கதையை கேட்ட எஸ்.பி, நீங்கள் ஆன்லைனில் ஒரு புகாரைக் கொடுங்கள், உங்களுக்கு மிரட்டல் விடுத்த நம்பரையும் அனுப்பி வையுங்கள் என்று தெரிவித்தார். அதன்படி அந்தப் பெண், செல்போன் நம்பரை அனுப்பி வைத்தார். உடனடியாக அந்த நம்பர் குறித்து சைபர் க்ரைம் போலீசாரை விசாரிக்க எஸ்.பி. வருண்குமார் உத்தரவிட்டார். அப்போது அந்த நம்பர் வெளிநாட்டிலிருந்து வந்தது தெரியவந்தது.


இதையடுத்து சந்தேகத்தின்பேரில் சகாபுதீனை அழைத்து போலீசார் விசாரித்தனர். அவரின் நடவடிக்கைகளில் போலீசாருக்கு சந்தேகங்கள் எழுந்தன. தங்கள் பாணியில் போலீசார் சகாபுதீனை விசாரித்தபோது உண்மைகள் வெளிவரத் தொடங்கின.


இதுகுறித்து கீழக்கரை மகளிர் போலீசார் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் விசாரித்தபோது சகாபுதீனுக்கும் இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. எஸ்.பி உத்தரவின்பேரில் அதிரடியாக ரீசார்ஜ் கடையில் சோதனை நடத்தினோம். அப்போது சகாபுதீனின் செல்போன்கள், லேப்டாப் ஆகியவற்றில் பெண்களின் ஆபாச வீடியோக்கள் பெயர் வாரியாக இருந்தன.

அந்த வீடியோக்கள் குறித்து விசாரித்தபோது, ரீசார்ஜ் செய்ய வரும் பெண்களுடன் சகாபுதீன் முதலில் நட்பாக பழகுவார். பின்னர், அந்தப் பெண்ணின் குடும்ப சூழலை தெரிந்து கொள்வார். வசதியான பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோரின் செல்போன் நம்பரில் தொடர்பு கொள்ளும் சகாபுதீன், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று முதலில் அந்தப் பெண்ணை வர்ணிப்பார்.

அவரின் பேச்சில் மயங்கும் பெண்களிடம், உங்களை நான் உயிருக்கு உயிராக காதலிக்கிறேன். அதனால் 2-வதாக உங்களை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு விருப்பம் என்றால் சொல்லுங்கள் என்று ஜென்டில்மேன் போல பேசுவார். சகாபுதீனின் பேச்சு, அவரின் அணுகுமுறை பல பெண்களுக்கு பிடித்து பழக ஆரம்பித்துள்ளனர்.


அப்போது, any desk என்ற ஆப்ஸை மொபைலில் டவுன்லோடு செய்து வைக்கும்படி சகாபுதீன் கூறுவார். அந்த ஆப்ஸை டவுன்லோடு செய்யும் பெண்களின் ரகசியங்களை சகாபுதீன் திருடியுள்ளார். அப்போது பெண்ணின் ஆபாச படங்கள், அந்தரங்க உரையாடல்களை திருடும் சகாபுதீன், அதை சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு வேறு ஒரு நம்பரிலிருந்து அனுப்பிவைப்பார்.

அதைப்பார்த்து பயப்படும் சில பெண்கள், தன்னுடைய காதலன் சகாபுதீனிடமே அந்தரங்க வீடியோ விவரங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். பின்னர், அந்த வீடியோ தூண்டில் மூலம் சகாபுதீன் சில பெண்களுடன் சந்தோஷமாக இருந்துள்ளார். அதையும் ரகசியமாக வீடியோ எடுத்து தன்னுடைய செல்போனில் சேமித்து வைத்து அவ்வப்போது பார்த்து ரசித்து வந்துள்ளார்.


சில பெண்களின் அழகில் மயங்கிய சகாபுதீன், அவர்களுக்காக பணத்தையும் தண்ணீ போல செலவழித்துள்ளார். அதற்கு பணம் தேவைப்பட்டதால் வேலை பார்த்த கடையிலேயே திருட தொடங்கியுள்ளார். பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதற்கு ஏற்ப கணக்கு வழக்குகளை கடையின் உரிமையாளர் செய்யது அபுபக்கர் பாதுஷா சரிபார்த்தபோது சகாபுதீன் சிக்கிக் கொண்டார். பணம் குறித்து விசாரித்தபோதுதான் பெண்களுடன் அவருக்கு இருக்கும் தொடர்பு தெரியவந்தது.


இதையடுத்து சகாபுதீன், என்னிடம் உள்ள இந்த வீடியோக்களை வைத்து நீங்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். அதனால் சகாபுதீன், பாதுஷா மற்றும் வெளிநாட்டிலிருக்கும் சையத் அலிம் கவுல் மூலம் ஆபாச வீடியோக்கள் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பயந்த பெண்கள் மிரட்டப்பட்டு பணம் பறிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சகாபுதீன் என்கிற ஷேக் சகாபுதீன், அவர் வேலை பார்த்த கடையின் உரிமையாளர் செய்யது அபுபக்கர் பாதுஷா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்.


ஆபாச படங்கள், வீடியோக்களை வெளிநாட்டிலிருந்து அனுப்பி மிரட்டிய சையத் அலிம் கவுலை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தக் கும்பலிடமிருந்து 4 செல்போன்கள், ஒரு லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம். அதில் உள்ள ஆபாச வீடியோக்கள் குறித்து விசாரித்து வருகிறோம். 100க்கும் மேற்பட்ட பெண்களின் வீடியோக்கள் உள்ளன” என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *