பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.60 ஆயிரம் கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதில் முதல்கட்டமாக 5 போர் விமானங்கள் நேற்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

பிரான்ஸின் மேரிங்நாக் விமானப்படைத் தளத்தில் இருந்து 5 போர் விமானங்களும் நேற்று இந்தியா நோக்கி சீறிப் பாய்ந்து புறப்பட்டன. பிரான்ஸுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான தொலைவு 7,000 கி.மீ. ஆகும். ஒரே கட்டமாக அங்கிருந்து இந்தியாவுக்கு சீறிப்பாய முடியாது. எனவே மேரிங்நாக்கில் இருந்து 6,574 கி.மீ. தொலைவில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் தாப்ரா விமானப்படைத் தளத்துக்கு 5 போர் விமானங்களும் இன்று வந்து சேர்ந்தன.
இதற்கு 7 மணி நேரமானது. நீண்ட தொலைவு என்பதால் வரும் வழியில் ரஃபேல் போர் விமானங்களுக்கு பெட்ரோல் தாகம் எடுத்தது. அப்போது பிரான்ஸ் விமானப்படையின் ஏர் பஸ் 330 விமானம் பெட்ரோல் கொண்டு வந்து நடுவானில் 5 ரஃபேல் விமானங்களுக்கும் ஊட்டிவிட்டது. இந்த புகைப்படங்களை பிரான்ஸுக்கான இந்திய தூதரகம் ட்விட்டரில் இன்று வெளியிட்டது.

பிரான்ஸ் விமானப் படைக்கு இந்திய தூதரகம் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளது.. அல்தாப்ராவில் இருந்து இந்தியாவின் ஹரியாணா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படைத் தளத்துக்கு நாளை பிற்பகல் ரஃபேல் போர் விமானங்கள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வழியில் இந்திய விமானப்படையின் ஐ.எல்.78 ரக விமானம், ரஃபேல் போர் விமானங்களுக்கு பெட்ரோல் ஊற்றிக் கொடுக்கிறது.