ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது

ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார்.
கடந்த 2017 மே மாதம் ரிபப்ளிக் டிவி செய்தி சேனல் தொடங்கப்பட்டது. மும்பையை சேர்ந்த கான்கார்ட் டிசைன் என்ற நிறுவனம், ரிபப்ளிக் டிவி சேனலுக்கு ஸ்டூடியோ வடிவமைத்துக் கொடுத்தது.


கடந்த மே 2018 மே 5-ம் தேதி கான்கார்ட் டிசைன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அன்வே நாயக், அவரது தாயார் குமுத் நாயக், அலிபாகில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர்.
தற்கொலைக்கு முன்பாக அன்வே நாயக் எழுதிய கடிதத்தில், ரிபப்ளிக் டிவி சேனலுக்கு ஸ்டூடியோ கட்டிக் கொடுத்தற்கான ரூ.83 லட்சம் கட்டணத்தை அர்னாப் கோஸ்வாமி அளிக்கவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். மேலும் 2 நிறுவனங்கள் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதாகவும் ஒட்டுமொத்தமாக ரூ.5.40 கோடி பணம் கிடைக்கவில்லை என்றும் கடிதத்தில் கூறியிருந்தார்.
மகாராஷ்டிராவில் கடந்த 2019 நவம்பர் இறுதியில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியேற்றது. பல்வேறு விவகாரங்களில் ரிபப்ளிக் டிவி சேனலுக்கும் மகாராஷ்டிர அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.


இந்த பின்னணியில் அன்வே நாயக் தற்கொலை வழக்கில் அர்னாப் கோஸ்வாமி மும்பையில் நேற்று கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து ரிபப்ளிக் டிவி தரப்பில் கூறும்போது, “அன்வே நாயக் வழக்கு எப்போதோ முடிந்துவிட்டது. பழிவாங்கும் நோக்கில் வழக்கை தூசிதட்டி அர்னாபை கைது செய்துள்ளனர். அவர் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவரை இழுத்து சென்றனர். அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. மனைவி, மகன் மீதும் போலீஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 3 மணி நேரம் அர்னாபின் வீட்டை போலீஸார் சீல் வைத்தனர். அவர் சட்டஆலோசனை பெற அனுமதிக்கவில்லை” என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறும்போது, “சுமார் ஒரு மணி நேரம் அர்னாப் கதவை திறக்கவில்லை. சட்டத்தைவிட யாரும் உயர்வானவர் கிடையாது” என்று தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன்பு அர்னாப் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பில் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அர்னாப் கைது நடவடிக்கையை மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கண்டித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *