இதற்கெல்லாமா துப்பாக்கியால் சுடுவார்கள் – அக்காள் தங்கையை நோக்கி சுட்ட சென்னை இன்ஜினீயர்

சென்னை ஐயப்பன்தாங்கல் சீனிவாசபுரம், ஆர்.ஆர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நாகேந்திரன் (27) இவரின் வீடு முதல் தளத்தில் உள்ளது..அதே அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் சாந்தி (42) என்பவர் குடியிருந்து வருகிறார். சாந்திக்கும் நாகேந்திரனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.


தன்னுடைய வீட்டின் குப்பையை 2-வது தளத்திலிருந்து சாந்தி கீழே கொட்டியுள்ளார். முதல் தளத்தில் குடியிருக்கும் நாகேந்திரனின் வீட்டின் வாசலில் குப்பை விழுந்துள்ளது. அதனால் ஏற்பட்ட தகராறு மோதலாகி உள்ளது. சாந்திக்கு ஆதரவாக அவரின் சகோதரியும் நாகேந்திரனிடம் சண்டை போட்டுள்ளார்.


ஆத்திரமடைந்த நாகேந்திரன், தன்னிடமிருந்த துப்பாக்கியை (ஏர்கன்) எடுத்து சாந்தியையும் அவரின் சகோதரியையும் மிரட்டியுள்ளார். துப்பாக்கியைப் பார்த்த சகோதரிகள் தப்பி ஓடியுள்ளனர். ஆனாலும் நாகேந்திரன் விடாமல் அவர்களை நோக்கி சுட்டுள்ளார். துப்பாக்கி சத்தம் கேட்டு அந்த அடுக்குமாடியில் குடியிருப்பவர்கள் வெளியில் வந்தனர்.


இதுகுறித்து எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சாந்தி அளித்த புகாரின்பேரில் இன்ஜினீயர் நாகேந்திரனை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.


நாகேந்திரன் இந்த துப்பாக்கியை ஆன் லைனில் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சாதாரண தகராறுக்கு இன்ஜினியர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துப்பாக்கி, ரப்பர் தோட்டாக்கள் மூலம் தான் சுட முடியும். அதனால் சகோதரிகள் மேல் ரப்பர் தோட்டாக்கள் பாய்ந்திருந்தால்கூட அவர்களின் உயிருக்கு ஆபத்தில்லை என்று சொல்கின்றனர் போலீசார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *