கொரோனா விதிகளை பின்பற்றி கொள்ளை நடைபெற்றிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும்.
பொது இடங்களுக்கு செல்லும்போது சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி உத்தர பிரதேசம் அலிகரில் நகைக் கடையில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.
அலிகரில் உள்ள நகைக்கடையில் வாடிக்கையாளர்கள் நகைகளை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது சிலர் நகைக்கடைக்குள் நுழைந்தனர்.
அவர்களுக்கு கடை ஊழியர் சானிடைசர் வழங்கினார். அதை பயன்படுத்தி அந்த நபர்கள் கைகளை சுத்தம் செய்து கொண்டனர்.
அதன்பின் கண் இமைக்கும் நேரத்தில் பேன்ட் பாக்கெட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்த நபர்கள், துப்பாக்கி முனையில் நகைகளை கொள்ளை அடித்தனர்.
சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகு எவ்வித பதற்றமும் இன்றி கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் முகக்கவசம் அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடிக்கிறது.
எனினும் கொள்ளையர்களை பிடிக்க அலிகர் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.