ஷிவ் நாடார் மகள் ரோஷினி நாடார் எச்சிஎல் தலைவராக பதவியேற்பு

தொழிலதிபர் ஷிவ் நாடாரின் மகள் ரோஷினி நாடார் எச்.சி.எல். நிறுவன தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.


தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், மூலைபொழி கிராமத்தில் பிறந்த ஷிவ் நாடார் மதுரை அமெரிக்கன் கல்லூரி, மற்றும் கோவை பிஎஸ்சி கல்லூரியில் பொறியியல் படிப்பு முடித்தார். முதலில் சிறிய நிறுவனத்தில் பணியாற்றிய ஷிவ் நாடார், கடந்த 1976-ம் ஆண்டில் எச்.சி.எல். சாப்ட்வேட் நிறுவனத்தை தொடங்கினார்.


ஒன்றரை லட்ச ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட எச்சிஎல் நிறுவனம் இன்று 82 ஆயிரத்து 906 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக வானளாவிய உயரத்துக்கு வளர்ந்து நிற்கிறது.


ஷிவ் நாடார், கிரண் நாடாரின் ஒரே மகள் ரோஷினி நாடார். கடந்த 2010-ம் ஆண்டில் ஷிகர் மல்ஹோத்ராவை, ரோஷினி திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஆர்மான், ஜஹான் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 2019-ம் ஆண்டில் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் செல்வாக்கு மிகுந்த 100 பெண்களின் பட்டியலில் ரோஷினி 54-வது இடம் பிடித்தார்.


எச்சிஎல் நிறுவனத்தை நடத்தி வந்த ஷிவ் நாடாருக்கு தற்போது 75 வயதாகிறது. இதைத் தொடர்ந்து நிறுவன பொறுப்புகளை அவர் தனது மகளிடம் ஒப்படைத்துள்ளார்.

எச்சிஎல் நிறுவனத்தின் புதிய தலைவராக ரோஷினி நாடார் மல்ஹோத்ரா பொறுப்பேற்றுள்ளார் என்று அந்த நிறுவனம் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவிலேயே பணக்கார பெண் என்ற பெருமையை ரோஷினி நாடார் பெற்றுள்ளார்.


எச்சிஎல் புதிய தலைவர் ரோஷினிக்கு தற்போது 38 வயதாகிறது. நிறுவனத்தின் பல்வேறு பதவிகள், பொறுப்புகளை திறம்பட வகித்துள்ள அவர் எச்சிஎல் நிறுவனத்தை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வார் என்று தொழில்துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *