ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வழக்கமான ரயில் சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. நீண்ட தொலைவு செல்லும் விரைவு ரயில்கள், சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகின்றன.
சென்னையில் புறநகர் ரயில் சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. அரசு, தனியார் துறையை சேர்ந்த அத்தியாவசிய பணியாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த சிறப்பு ரயில்களில் சிலர் பட்டாசுகளை எடுத்துச் செல்வதாக புகார்கள் எழுந்துள்ளன. அவ்வாறு பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதிக்க சட்டத்தில் இடமுள்ளது என்று ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.