தெலங்கானாவின் மெட்சல் மாவட்டம், கினரா தாசில்தாராக நாகராஜு (வயது 54) பணியாற்றி வந்தார். அங்குள்ள ராம்பல்லியில் 54 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
இதில் 28 ஏக்கர் நிலத்தை தனியார் ரியல் எஸ்டேட் அதிகாரிகள் கையகப்படுத்த திட்டமிட்டனர். இது தொடர்பாக தாசில்தார் நாகராஜுவிடம் பேரம் பேசினர்.
இந்த நிலத்தை ஒரே பெயரில் மாற்றி எழுத ரூ. 2 கோடி லஞ்சம் கொடுப்பதாக ரியல் எஸ்டேட் அதிகாரிகள் தாசில்தார் நாகராஜுவுக்கு வாக்குறுதி அளித்தனர்.
இதில் ஒரு கோடி ரூபாய் கடந்த வெள்ளிக்கிழமை கைமாறியது. தாசில்தார் நாகராஜுவிடம் வீட்டில் லஞ்ச பணம் வழங்கப்பட்டது.
இந்த தகவலை முன்கூட்டியே அறிந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், தாசில்தார் வீட்டின் அருகே மறைந்திருந்தனர்.

லஞ்ச பணம் கைமாறியதும், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தாசில்தாரின் வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 500 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக பிடிபட்டது. ஒட்டுமொத்தமாக ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
பணம் எண்ணும் இயந்திரம் மூலம் நள்ளிரவு வரை நோட்டுகள் எண்ணப்பட்டன.
தாசில்தார் நாகராஜு, ராம்பல்லி விஏஓ சாய்ராஜ், ரியல் எஸ்டேட் தரகர் ஸ்ரீநாத், நில ஏஜெண்ட் கன்னட அஞ்சி ரெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் கைதாகி கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் தாசில்தார் நாகராஜு ஜாமீன் கிடைத்து வெளியே வந்தார்.
மீண்டும் அவர் கைவரிசை காட்ட, லஞ்ச ஒழிப்பு போலீஸாரும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.