ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி வழங்கும் கோப்பில் முதல்வர் ஸ்டாலின் முதல் கையெழுத்திட்டுள்ளார்.

தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றார். இதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் அவர் தனது பணிகளை தொடங்கினார். முதல் பணியாக, 5 முக்கிய கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.

அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு முதல்வர் கையெழுத்திட்டார். இது 2 தவணைகளாக வழங்கப்படுகிறது. இதில் முதல்கட்டமாக 2 ஆயிரம் ரூபாயை மே மாதத்திலேயே வழங்கும் உத்தரவில் முதல்வர் கையெழுத்திட்டுள்ளார்.

ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் குறைத்து விற்பனை செய்வதற்கான அரசாணையில் முதல்வர் கையெழுத்திட்டார். மே 16-ம் தேதி முதல் விலை குறைப்பு அமலுக்கு வருகிறது.

சாதாரண கட்டண, நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்வதற்கான அரசாணையில் கையெழுத்திட்டுள்ளார். இந்த நடைமுறை மே 8 முதல் அமலுக்கு வருகிறது.

இதே போல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்குவதற்கான அரசாணையில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். இதேபோல் புகார் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காண புதிய துறை தொடர்பான கோப்பிலும் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *