தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை பட்டியல் அக். 3-ல் வெளியீடு செய்யப்படுகிறது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவ, மாணவியருக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இதில் சேருவதற்கு rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் ஆகஸ்ட் 27 முதல் செப். 25 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியர் விவரங்கள் அந்தந்த பள்ளி தகவல் பலகைகளில் செப். 30-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும். கூடுதலாக விண்ணப்பங்கள் இருந்தால் அக். 1-ம் தேதி குலுக்கல் நடத்தப்படும்.
இறுதி பட்டியல் அக். 3-ம் தேதி இணையத்திலும் பள்ளி தகவல் பலகையிலும் வெளியிடப்படும். இலவச மாணவர் சேர்க்கையில் ஏதாவது புகார் இருந்தால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவிக்கலாம் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.