ரஷ்ய கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க அனுமதி

ரஷ்ய கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அரசு நிறுவனமான கமலேயா இன்ஸ்டிடியூட் கண்டுபிடித்துள்ள ‘ஸ்புட்னிக் வி’ கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் விற்பனை செய்ய ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபாரேட்டரீஸுடன் கடந்த செப்டம்பரில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி 10 கோடி ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிகள் இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளன.

இந்த தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனையை இந்தியாவில் நடத்த மத்திய சுகாதாரத் துறையின் மருந்து தரக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் (டிசிஜிஐ) டாக்டர் ரெட்டிஸ் லேபாரேட்டரீஸ் விண்ணப்பத்திருந்தது. 

இதை பரிசீலித்த டிசிஜிஐ நிர்வாகம், ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியின் 2-ம் கட்ட பரிசோதனையையும் இந்தியாவில் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதில் உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து ரஷ்ய தடுப்பூசியின் 2-ம், 3-ம் கட்ட பரிசோதனைகளை நடத்த டிசிஜிஐ நேற்று அனுமதி வழங்கியது.  

இதுகுறித்து  டாக்டர் ரெட்டிஸ் லேபாரேட்டரீஸ் நிர்வாக இயக்குநர் ஜி.வி.பிரசாத் கூறும்போது, “இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பரிசோதனையை நடத்த அனுமதி கிடைத்துள்ளது. எங்களது தடுப்பூசி பாதுகாப்பானது, நல்ல பலன் அளிக்கக்கூடியது” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *