இந்தியாவுக்கு 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை விற்கிறது ரஷ்யா

இந்தியாவுக்கு 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை விற்கிறது ரஷ்யா
ரஷ்ய அரசு சுகாதாரத் துறை கீழ் கமலேயா இன்ஸ்டிடியூட் செயல்படுகிறது. இந்த ஆராய்ச்சி நிறுவனம் ‘ஸ்புட்னிக் வி’ என்ற பெயரில் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.

இந்த தடுப்பூசியை வர்த்தகரீதியாக விற்பனை செய்ய ரஷ்ய அரசு கடந்த ஆகஸ்ட் தொடக்கத்தில் ஒப்புதல் வழங்கியது. இரண்டாம் கட்ட பரிசோதனையில் இருக்கும்போதே ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம் வழங்கிவிட்டது. தற்போது இந்த தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனையில் உள்ளது.

இந்நிலையில் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டாக்டர் ரெட்டி லேபாரேட்டரீஸுக்கு 10 கோடி ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிகளை விற்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதுகுறித்து டாக்டர் ரெட்டி லேபாரேட்டரீஸ் நிர்வாக இயக்குநர் ஜி.வி. பிரசாத் கூறியதாவது:
ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனையை இந்தியாவில் தொடங்க உள்ளோம்.

ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனையில் ஒரு பெண்ணுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனையில் ஒரு பெண்ணுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இதற்கு மத்திய அரசிடம் முறைப்படி அனுமதி கோரியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் பரிசோதனையை தொடங்குவோம். இதன்பிறகு ரஷ்யாவிடம் இருந்து 10 கோடி ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசிகள் எங்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

இவை இந்திய மக்களுக்கு வழங்கப்படும். இதுதொடர்பாக ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்துடன் (ஆர்டிஐஎப்) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியம் கூறும்போது, “ரஷ்யாவில் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக டாக்டர் ரெட்டி லேபாரேட்டரீஸ் செயல்படுகிறது.

இந்தியாவின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனத்துடன் கொரோனா தடுப்பூசி தொடர்பாக ஒப்பந்தம் செய்துள்ளோம். எங்களது தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. இதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் வர்த்தகரீதியாக ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *