ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
ரஷ்ய அரசு நிறுவனமான கமலேயா இன்ஸ்டிடியூட் ‘ஸ்புட்னிக் வி’ என்ற பெயரில் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.
இந்த தடுப்பூசியை வர்த்தகரீதியாக விற்பனை செய்ய அந்த நாட்டு அரசு ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் இந்த தடுப்பூசியை விற்பனை செய்ய 2, 3-ம் கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும்.
அதன்படி தற்போது ‘ஸ்புட்னிக் வி தடுப்பூசி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சுமார் 40,000 பேர் பரிசோதனையில் பங்கேற்றுள்ளனர்.
இதுதொடர்பாக ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியம் (ஆர்டிஐஎப்) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்ய ஹைதராபாத்தை சேர்ந்த ஹெட்டேரோ பயோ பார்மாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.
இதன்படி இந்தியாவில் ஆண்டுக்கு 10 கோடி ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் தயாரிக்கப்படும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசி உற்பத்தி தொடங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி 95 சதவீதம் பலன் அளிப்பதாக ரஷ்யா உறுதி அளித்துள்ளது.
இது 2 முறை போட வேண்டிய தடுப்பூசியாகும். ஒரு தடுப்பூசி ரூ.740 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 தடுப்பூசிகளுக்கும் சேர்த்து ரூ.1,480 செலவாகும்.
ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் கிரில் திமித்ரியெவ் கூறும்போது, “இந்தியா மட்டுமன்றி பிரேசில், சீனா, தென்கொரியா ஆகிய நாடுகளில் ஸ்புட்னிக் வி கரோனா தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட உள்ளன.
பெலாரஸ், வெனிசூலா நாடுகளில் எங்களது தடுப்பூசி பரிசோதனை நடைபெற்று வருகிறது. மற்ற கரோனா தடுப்பூசிகளின் விலையை ஒப்பிடும்போது ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் விலை மிகவும் குறைவானது. இது நீண்ட காலத்துக்கு எதிர்ப்பு சக்தியை வழங்கும்” என்றார்.