தபாலில் சபரிமலை பிரசாதத்தை பெறும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கேரளாவின் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயிலின் பல்வேறு பூஜைகளுக்கு இந்தியா மட்டுமன்றி மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
இதை கருத்தில் கொண்டு சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதத்தை தபால் மூலம் பெறுவதற்கான திட்டம் கடந்த 6-ம் தேதி தொடங்கப்பட்டது. இதன்படி நாட்டில் எந்த தபால் நிலையத்திலும் மின்னணு முறையில் பக்தர்கள் பணம் செலுத்தி பிரசாதத்தை தபாலில் பெறலாம். இதன் விலை ரூ.450 ஆகும். அரவணை பாயாசம், நெய், குங்குமம், மஞ்சள், விபூதி, அர்ச்சனை பிரசாதம் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.