சபரிமலை பக்தர்களுக்காக சிறப்பு மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவின் சபரிமலையில் புகழ்பெற்ற ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மகர விளக்கை பூஜைக்காக வரும் 16-ம் தேதி ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது.
இதுகுறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
“சபரிமலை கோயில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் 48 அரசு மருத்துவமனைகள், 21 தனியார் மருத்துவமனைகள் பக்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் கோட்டயம் மாவட்டத்தில் 27 மருத்துவமனைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
சபரிமலையில் உள்ள அனைத்து மருத்துவ மையங்களிலும் டாக்டர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் கொரோனா தடுப்புக் குழுவினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். பம்பை பகுதியில் அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். சன்னிதானம் அமைந்துள்ள பகுதியில் அவசர கால அறுவை சிகிச்சைக்கு மையம் அமைக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.