ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் அதிரடியாக நீக்கம்

ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.


கடந்த 2018 இறுதியில் ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போதே முதல்வர் பதவிக்கு அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இறுதியில் முதல்வராக அசோக் கெலாட்டும் துணை முதல்வராக சச்சின் பைலட்டும் பதவி ஏற்றனர். இருப்பினும் இருவருக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது.


ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு ரூ.25 கோடி கொடுத்து இழுக்க பாஜக சதி செய்து வருவதாக முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டினார். குறிப்பிட்ட 3 சுயேச்சை எம்எல்ஏக்கள், பாஜக சார்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.


இதுதொடர்பாக காங்கிரஸ் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் தரப்பில் 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் மற்றும் சச்சின் பைலட் உள்ளிட்டோர் நேரில் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஆத்திரமடைந்த சச்சின் பைலட், தனது ஆதரவாளர்களுடன் டெல்லி அருகேயுள்ள குருகிராமில் உள்ள ஓட்டலில் முகாமிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு பாஜக மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவை அவர் சந்தித்துப் பேசினார்.


இதனிடையே ஜெய்ப்பூரில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தை சச்சின் பைலட்டும் ஆதரவு எம்எல்ஏக்களும் புறக்கணித்தனர். இதைத் தொடர்ந்து இன்று காலை ஜெய்ப்பூரில் மீண்டும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தையும் சச்சின் பைலட் புறக்கணித்தார்.


இதைத் தொடர்ந்து துணை முதல்வர், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட்டை நீக்கம் செய்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் 2 பேரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.


முதல்வர் அசோக் கெலாட் பெரும்பான்மையை இழந்துவிட்டார். சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. எனவே அடுத்த கட்டமாக சச்சின் பைலட்டும் அவரது ஆதரவாளர்களும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. எத்தனை எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வார்கள் என்பதை பொறுத்தே ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு தாக்கு பிடிக்குமா, கவிழுமா என்பது தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *