தகுதி நீக்க நோட்டீஸை எதிர்த்து ராஜஸ்தான் ஐகோர்ட்டில் சச்சின் பைலட் அணி வழக்கு தொடர்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வந்தது.
சில நாட்களுக்கு முன்பு சச்சின் பைலட் தனது ஆதரவாளர்களுடன் டெல்லி அருகேயுள்ள ஓட்டலில் முகாமிட்டார். கொறடா உத்தரவு பிறப்பித்தும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காததால் சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது.
மேலும் கொறடா உத்தரவு பிறப்பித்தும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காததால் 19 எம்எல்ஏக்களுக்கு பேரவைத் தலைவர் சி.பி.ஜோஷி நோட்டீஸ் அனுப்பினார். வெள்ளிக்கிழமைக்குள் பதில் அளிக்க அவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களின் பதில் திருப்தி அளிக்காவிட்டால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 19 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய முடியும்.
இந்நிலையில் தகுதி நீக்க நோட்டீஸை எதிர்த்து ராஜஸ்தான் ஐகோர்ட்டில் சச்சின் பைலட் அணி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இன்று மாலை விசாரணை நடத்தப்பட உள்ளது. ராஜஸ்தான் அரசியலில் நாளுக்கு நாள் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.