கடந்த 2018-ம் ஆண்டில் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அப்போது முதல்வர் பதவிக்கு அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே கடும் போட்டி எழுந்தது. இறுதியில் அசோக் கெலாட்டுக்கு முதல்வர் பதவியும் சச்சின் பைலட்டுக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டன.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராகவும் சச்சின் பைலட் உள்ளார். ஆரம்பம் முதலே அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
முதல்வர் புகார்
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சில நாட்களுக்கு முன்பு கூறும்போது, “கடந்த ஆண்டு கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்த்த பாஜக, இந்த ஆண்டில் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்த்தது. இ்பபோது ராஜஸ்தான் மாநில அரசை கவிழ்க்க முயன்று வருகிறது. காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு ரூ.15 கோடி வரை பாஜக விலை பேசி வருகிறது. பாஜக சார்பாக 3 சுயேச்சை எம்எல்ஏக்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க முயற்சி செய்கின்றனர்” என்று குற்றம் சாட்டினார்.
இந்த 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக நேரில் விளக்கம் அளிக்கக் கோரி சச்சின் பைலட், சுயேச்சை எம்எல்ஏக்கள் உள்ளிட்டோருக்கு போலீஸ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
டெல்லியில் முகாம்
இதனால் ஆத்திரமடைந்த சச்சின் பைலட்டும் அவரது ஆதரவாளர்களான 15 எம்எல்ஏக்களும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இவர்கள் டெல்லி அருகேயுள்ள குருகிராமில் உள்ள ஓட்டலில் தங்கியுள்ளனர்.
பாஜகவில் அண்மையில் இணைந்த ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை, சச்சின் பைலட் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். இதன்பின் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “சச்சின் பைலட் காங்கிரஸில் இருந்து ஓரம் கட்டப்படுவது வருத்தமளிக்கிறது. அவருக்கு எதிராக ராஜஸ்தான் முதல்வர் செயல்படுகிறார் ” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
முதல்வர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் நேற்றிரவு அவசர கூட்டத்தை நடத்தினார். இதில் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் பங்கேற்றனர். இன்று காலை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள மாட்டேன் என்று துணை முதல்வர் சச்சின் பைலட் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
சச்சின் பைலட்டும் 5 எம்எல்ஏக்களும் கட்சிவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். இதன் பின்னணியில் பாஜக உள்ளது என்று முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரத்தால் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் வாய்ப்புள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்சிகளின் பலம்
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மொத்தம் 200 உறுப்பினர்கள் உள்ளனர். ஆரம்பத்தில் காங்கிரஸுக்கு 102 எம்எல்ஏக்கள் பலம் இருந்தது. 13 சுயேச்சைகள், பகுஜன் சமாஜை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு அளித்தனர். கடந்த 2019-ம் ஆண்டில் பகுஜன் சமாஜின் 6 எம்எல்ஏக்களும் காங்கிரஸில் இணைந்தனர். இதன்மூலம் காங்கிரஸின் பலம் 108 ஆக உயர்ந்தது.
காங்கிரஸ் 108, சுயேச்சைகள் 13, பாரதிய பழங்குடி கட்சி 2, மார்க்சிஸ்ட் 2 என காங்கிரஸ் அரசுக்கு 125 எம்எல்ஏக்களின் பலம் உள்ளது. சச்சின் பைலட்டுக்கு 20 முதல் 30 எம்எல்ஏகளின் ஆதரவு உள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜகவுக்கு 72 எம்எல்ஏக்களும் அதன் கூட்டணி கட்சியான ராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சிக்கு 3 எம்எல்ஏக்களும் உள்ளனர்.
ஆட்சி மாறலாம்
சச்சின் பைலட் அணியை சேர்ந்த 30 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தால் காங்கிரஸின் பலம் குறையும். ராஜஸ்தான் சட்டப்பேரவையின் பலமும் குறையும். காங்கிரஸுக்கு தற்போது ஆதரவளிக்கும் 13 சுயேச்சை எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு அணி மாறக்கூடும். அப்போது ராஜஸ்தானில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.