காங்கிரஸ் அதிருப்தி தலைவர் சச்சின் பைலட் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:
காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி கடந்த ஆண்டு பதவியில் இருந்து இறங்கினார். இதன்பிறகு அசோக் கெலாட்டும் அவரது ஆதரவாளர்களும் எனக்கு எதிராக காய் நகர்த்த தொடங்கினர். எனது சுயமரியாதையை காப்பாற்றி கொள்வது மிகப்பெரும் போராட்டமாக அமைந்தது.
அசோக் கெலாட் மீது எனக்கு எவ்வித கோபமும் கிடையாது. எனக்கு அதிகாரம், சிறப்பு அந்தஸ்து தேவையில்லை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இதுவே எனது விருப்பம்.
எனது உத்தரவுகளை செயல்படுத்தக்கூடாது என்று முதல்வர் அசோக் கெலாட் ஐஏஎஸ் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார். அரசு துறை கோப்புகள் எதுவும் எனக்கு வருவதில்லை. மக்களுக்கு சேவையாற்ற முடியவில்லை என்றால் நான் பதவியில் இருந்து என்ன பயன்?
இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநில மேலிட பொறுப்பாளரிடமும் மூத்த தலைவர்களிடமும் பலமுறை எடுத்துரைத்துள்ளேன். அசோக் கெலாட்டிடம்கூட பிரச்சினையை கூறியிருக்கிறேன்.
பாஜகவுடன் கைகோத்து செயல்படுவதாக என் மீது கூறப்படும் புகார்கள் பொய்யானவை. ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற நான் அயராது பாடுபட்டேன். நானே எப்படி எனது கட்சிக்கு எதிராக செயல்படுவேன். நான் இப்போதும் காங்கிரஸ்காரன்” என்று தெரிவித்துள்ளார்.