மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. சாலை, தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மும்பையின் மேற்கு மட்டுங்கா பகுதியில் உள்ள துளசி பைல் ரோடா பகுதியில் கடந்த புதன்கிழமை கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மழை தண்ணீர் வடிய இடமில்லாமல் குடியிருப்புகள் வெள்ளம் புகுந்தது. சாலையில் சென்ற வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
அரசு அதிகாரிகள் முதல் உள்ளூர் ஆண்கள் வரை கை கட்டி வேடிக்கை பார்க்க அந்தப் பகுதியை சேர்ந்த பெண், துணிச்சலாக களத்தில் இறங்கினார்.
சாலையில் இருந்த பாதாள சாக்கடை மூடியை திறந்துவிட்டார். அதில் தண்ணீர் வடிந்து வெள்ளம் குறைந்தது.
ஆனால் பாதாள சாக்கடை மூடியில் ஏதாவது வாகனம் விழுந்தால் என்ன செய்வது? அந்த பிரச்சினைக்கும் அந்த பெண்ணே தீர்வு கண்டார்.
கொட்டும் மழையில் 5 மணி நேரம் அதே இடத்தில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார். விபத்து ஏற்படாமல் தடுத்தார். வெள்ளம் வடிந்த பிறகு பாதாள சாக்கடை மூடியை மூடிவிட்டு சென்ரார்.அந்த வீரமங்கைக்கு வாகன ஓட்டிகள் அனைவரும் சல்யூட் அடித்து சென்றனர். நாமும் விறைப்பாக ஒரு சல்யூட் அடிக்கலாம்.