பாலிவுட் நடிகர்கள் இர்பான் கான், ரிஷி கபூர் ஆகியோர் புற்றுநோயால் அடுத்தடுத்து உயிரிழந்தனர். நடிகை சோனாலி பிந்தரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். சாவின் விளிம்பில் இருந்து மீண்ட அவர் மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த மாதம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தற்போது பாலிவுட் உலகை மேலும் ஒரு சோகம் சூழ்ந்திருக்கிறது. இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் சுனித் தத்துக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
நடிகர் சுனில் தத், நடிகை நர்கீஸின் மூத்த மகன் சஞ்சய் தத்.

கடந்த 1972-ல் வெளியான “ரேஷ்மா அர் ஷேரா” திரைப்படத்தில் தனது 12-வது வயதில் குழந்தை நட்சத்திரமாக அவர் அறிமுகமானார். கடந்த 1980-90-களில் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார்.
திரையுலகில் உச்சத்தில் இருந்தபோது போதைக்கு அடிமையான சஞ்சய் தத்தை, அவரது தந்தை சுனில் தத் மருத்துவ சிகிச்சைகளின் மூலம் மீட்டு கொண்டு வந்தார்.
இதன்பின் கடந்த 1993 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத் சிக்கினார். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் தானியங்கி துப்பாக்கிகள், கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில், விசாரணை நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2013-ம் ஆண்டில் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. முதலில் கைது செய்யப்பட்டபோது ஒன்றரை ஆண்டுகள் அவர் சிறையில் இருந்தார்.
எஞ்சிய மூன்றரை ஆண்டுகளுக்காக 2013-ம் ஆண்டில் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். நன்னடத்தையின் காரணமாக 8 மாதங்களுக்கு முன்பாக அவர் விடுதலை செய்யப்பட்டார்.
போதை, ஆயுத வழக்கு காரணமாக பாலிவுட் திரையுலகின் உயரிய இடத்தை அவர் இழந்தார். எனினும் இந்தி திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
கடந்த 8-ம் தேதி சஞ்சய் தத்துக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்படும் மெமோரியல் ஸ்லோன் கேட்டரிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற அவர் திட்டமிட்டுள்ளார். ஆனால் ஆயுத வழக்கில் சிறை தண்டனை பெற்றவர் என்பதால் அவருக்கு அமெரிக்க விசா கிடைப்பதில் சிக்கல் உள்ளது.

அமெரிக்க விசா கிடைக்கவில்லை என்றால் சிங்கப்பூரில் அவர் சிகிச்சை பெறுவார் என்று பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புற்றுநோய் பாதிப்பு குறித்து சஞ்சய் தத் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. மருத்துவ சிகிச்சைக்காக திரை துறையில் இருந்து சிறிது காலம் ஓய்வு பெறுகிறேன்.
விரைவில் திரும்புவேன் என்று இன்ஸ்டாகிராம் வாயிலாக அவர் அறிவித்தார்.
மூன்றாம் நிலை நுரையீரல் புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து சஞ்சய் தத்தின் மனைவி மனிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில்,”தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்.

அவற்றை ரசிகர்கள் நம்ப வேண்டாம். கடவுள் எங்களுக்கு மீண்டும் ஒரு சோதனையை கொடுத்துள்ளார். இதில் இருந்து மீண்டு வருவோம். சஞ்சய் தத் ஒரு போராளி. அவர் நிச்சயமாக மீண்டு வருவார். அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் சஞ்சய் தத் கடந்த 1987-ல் ரிச்சா சர்மாவையும் கடந்த 1998-ல் ரியா பிள்ளையையும் திருமணம் செய்தார். இருவரையும் அடுத்தடுத்து விவாகரத்து செய்த அவர் கடந்த 2008-ல் மனிதாவை திருமணம் செய்தார். சஞ்சய் தத்தைவிட மனிதா 28 வயது குறைந்தவர்.
மேலும் சஞ்சய் தத் புகழின் உச்சியில் இருந்தபோது ஒரு நாளைக்கு ஒரு காதலி என்று வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
சஞ்சய் தத்துக்கு முதல் மனைவி மூலம் திரிஷ்லா தத் (32) என்ற மகளும் 3-வது மனைவி மூலம் ஷாரான் தத் (9) என்ற மகனும் இக்ரா தத் (9) என்ற மகளும் உள்ளனர்.