பெங்களூரு சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு சசிகலா மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 3 பேரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மூவரின் 4 ஆண்டு கால சிறை தண்டனையும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கிடையில் சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ரூ. 10 கோடி அபராதத் தொகையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா அண்மையில் செலுத்தினார்.
இதன் தொடர்ச்சியாக சசிகலா சிறை நிர்வாகத்தில் ஒரு மனுவை அளித்துள்ளார்.
”கடந்த 45 மாதங்களாக சிறையில் இருந்துள்ளதால் சிறைத் துறை விதிமுறையின்படி 120 நாட்களுக்கு முன்பாக என்னை விடுதலை செய்ய முடியும். சிறையில் எவ்வித விதிமுறை மீறலிலும் ஈடுபடவில்லை. மைசூரு பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வியின் மூலம் கன்னடம் பயின்றுள்ளேன். நன்னடத்தை விதியின் கீழ் எனக்கு சலுகை வழங்கி, முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்” மனுவில் அவர் கோரியுள்ளார்.
இதுகுறித்து கர்நாடக சிறைத் துறை தீவிரமாக பரிசீலனை நடத்தி வருகிறது.