சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் சித்ரவதை செய்யப்பட்டதாக குடும்பத்தினரும் வியாபாரிகளும் குற்றம் சாட்டியுள்ளனர். விசாரணை என்ற பெயரில் இருவரையும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜா ஆகியோர் அடித்து கொலை செய்துவிட்டதாக உறவினர்கள் பகிரங்கமாக புகார் கூறியுள்ளனர்.
சிபிசிஐடி போலீசார், இந்த வழக்கை கையில் எடுத்தவுடன் அதிரடி ஆக்சனில் களமிறங்கினர். 5 பேர் மீதும் கொலை வழக்கு, ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைதான 5 பேரும் தூத்துக்குடி சிறையில் அடைக்கப்பட்டனர். பாதுகாப்பு கருதி, மதுரை சிறைக்கு அவர்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தபோது வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு முறைப்படி கடிதம் அனுப்பப்பட்டது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை சிபிஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அனுமதி வழங்கியது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிக்கையும் மத்திய அரசு வெளியிட்டது.
இதன்படி சாத்தான்குளம் வழக்கு விரைவில் சிபிசிஐடி போலீஸாரிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றப்பட உள்ளது. அதன்பிறகு வழக்கு விசாரணை வேகமெடுக்கும் என்றும் பல உண்மைகள் வெளிச்தத்துக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.