சாத்தான்குளம் காவல் நிலையத்தின் முன்னாள் இன்ஸ்பெக்டர் முதல் சம்பந்தப்பட்ட எஸ்.ஐ-க்கள், காவலர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியபோது உங்களிடமிருந்து எப்படி உண்மைகளை வரவழைக்கணுமுன்னு எங்களுக்குத் தெரியும் என சிபிசிஐடி விசாரணைக் குழுவிலிருந்த உயரதிகாரி அதிரடியாகக் கூறியதும் உண்மையிலே அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாத்தான்குளம்
சாத்தான்குளம் சம்பவத்தில் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர் முருகன் என 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மருத்துவ பரிசோதனைக்குப்பிறகு அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வழக்கை கையில் எடுத்தவுடன் சிபிசிஐடி போலீசார், அதிரடியாக சாத்தான்குளம் வழக்கில் களமிறங்கியுள்ளனர்.
முதலில் கைது செய்யப்பட்ட ரகுகணேஷ், அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அடுத்தடுத்து கைது படலம் தொடர்ந்தது. சாத்தான்குளம் சம்பவத்தில் சிசிடிவி பதிவுகளை அழித்தது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வியாழக்கிழமை நடந்த வழக்கு விசாரணையின்போது சிபிசிஐடி போலீசார், இதுவரை எடுக்கப்பட்ட விவரங்களைத் தெரிவித்தனர். அதைக்கேட்ட நீதிபதிகள், சிபிசிஐடி போலீசாரின் நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர். மேலும் சாட்சியம் அளித்த ரேவதியிடமும் நீதிபதிகள் போனில் பேசினர். அதன்பிறகு அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
கேள்விகள்
சிபிசிஐடி போலீஸ் ஐஜி சங்கர் அளித்த பேட்டியில் இன்ஸ்பெக்டர் முதல் காவலர் வரை என 4 பேரை கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.
சிபிசிஐடி விசாரணையில் என்ன நடந்தது என்று கேட்டதற்கு, “முதலில் சிக்கிய ரகுகணேஷிடம் ஜெயராஜ், பென்னிக்ஸை எத்தனை மணிக்கு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தீர்கள் என்று விசாரித்துள்ளனர். மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் கடைக்கு எத்தனை மணிக்கு சென்றீர்கள் என அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்டு துளைத்தனர். அப்போது ரகுகணேஷ் கூறிய தகவல்களுக்கும் சிபிசிஐடி போலீசாரிடம் சிக்கிய சிசிடிவி ஆதாரங்கள், சாட்சிகளின் தகவல்களுக்கு வித்தியாசம் இருந்துள்ளது.
வாக்குமூலம்
உடனே சிபிசிஐடி போலீஸ் உயரதிகாரி ஒருவர், நாங்களும் போலீஸ் என்பதை மனதில் வைத்துக் கொண்டு பேசுங்கள் என்று கூறியதோடு உங்களிடமிருந்து எப்படி உண்மைகளை வரவழைக்கணுமுன்னு எங்களுக்குத் தெரியும் என்று கோபத்தோடு கூறியதாகக் சொல்லப்படுகிறது. அதன்பிறகு ரகுகணேஷ் அளித்த தகவல்களை வாக்குமூலமாக பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
அடுத்து சிபிசிஐடி போலீசார், எஸ்.ஐ பாலகிருஷ்ணன், காவலர் முருகனிடம் விசாரித்துள்ளனர். அப்போது எஸ்.ஐ பாலசுப்பிரமணியன், சிபிசிஐடி போலீஸ் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதனால் அவர் இந்த வழக்கில் அப்ரூவராகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைடுத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரிடம் விசாரித்தபோது அவரது சர்வீஸ் ஃபைல் அடிப்படையில் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. உடனே அவர் இந்த வழக்கிற்கு தேவையானதை மட்டும் கேளுங்கள் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. உடனே சிபிசிஐடி போலீசார், அதுவும் இந்த வழக்கிற்கு தேவையான கேள்விதான் என்று கூறியுள்ளனர்.
ஜெயராஜ் குடும்பத்தினர்
அதன்பிறகு ஸ்ரீதரிடம் விசாரணை முடித்த சிபிசிஐடி போலீசார், 3 பேரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொரோனா பரிசோதனை உள்பட உடல் நல பரிசோதனையை செய்து முடித்துள்ளனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சுமார் 13 மணி நேரத்துக்கு மேல் விசாரணை தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கில் சாத்தான்குளம் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து முதல்வருக்கும் போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும் ஜெயராஜ் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். அதோடு ஆளுங்கட்சி தரப்பில் ஜெயராஜ் குடும்பத்தினரைச் சந்தித்தவர்கள், விரைவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் உங்களைச் சந்திப்பார் என்று கூறியுள்ளனர்.
அப்போது, அரசு அறிவித்ததுபோல தகுதியின் அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஜெயராஜ் குடும்பத்தில் உள்ளவர்களின் கல்வி தகுதிகளையும் யாருக்கு வேலை வழங்க வேண்டும் என்று அவரின் குடும்பத்தினரிடம் அரசு அதிகாரிகள் கேட்டு தகவல்களை அனுப்பி வைத்துள்ளனர். விரைவில் ஜெயராஜின் மூன்று மகள்களில் ஒருவருக்கு அரசு வேலைக்கான ஆர்டர் வழங்கப்படவுள்ளது.
சிபிசிஐடி பிளான்
சாத்தான்குளம் சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்ததோடு நிற்காமல் இந்த வழக்கில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்ற கோணத்திலும் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். சிபிஐ விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் அதற்குள் சிபிசிஐடி போலீசார் தங்களின் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். சிபிசிஐடி போலீஸ் டீம் ஒவ்வொருவருக்கும் ஒரு பணி என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஐஜி சங்கரின் தலைமையிலான சிபிசிஐடி போலீசார், சிறப்பாக செயல்படுவதாக நீதிமன்றத்தில் மட்டுமல்ல மக்கள் மனதிலும் ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளது.