சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மரக்கடை நடத்தி வந்தார். அவரது மகன் பென்னிக்ஸ் செல்போன் கடை நடத்தி வந்தார். ஊரடங்கை மீறியதாக தந்தை, மகனை கடந்த ஜூன் 19-ம் தேதி சாத்தான்குளம் போலீஸார் கைது செய்தனர்.
போலீஸ் நிலையத்தில் இருவரையும் போலீஸார் கொடூரமாக சித்ரவதை செய்துள்ளனர். இதன்பின் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். முதலில் பென்னிக்ஸும் அதன்பின் அவரது தந்தை ஜெயராஜும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
போலீஸாரின் கொடூர சித்ரவதையில் இருவரும் கொலை செய்யப்பட்டதாக வியாபாரிகள் குற்றம் சாட்டினர். தமிழகம் முழுவதும் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், 2 சார்பு இன்ஸ்பெக்டர்கள், ஒரு சிறப்பு இன்ஸ்பெக்டர், 2 தலைமை காவலர், 4 போலீஸ்காரர்கள் மீது கடந்த ஜூலையில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதில் சிறப்பு இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார்.
மதுரையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.