தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு விசாரணை முடிந்து இருவரையும் கோவில்பட்டி சிறையில் போலீசார் அடைத்தனர். அடுத்த நாள் உடல்நலம் பாதிக்கப்பட்ட இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
இன்ஸ்பெக்டர் கைது
தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்கு நீதி கேட்டு வியாபாரிகள் போராட்டத்தில் குதித்தனர். இந்தப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள், வியாபாரிகள் சங்கங்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்துக்கு தூத்துக்குடி எம்பி கனிமொழி கொண்டு சென்றார். அங்கிருந்தும் காவல் துறையினரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
மதுரை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது சிபிஐ விசாரணை நடத்துவதற்கு முன் சிபிசிஐடி போலீசார் விசாரிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இந்த வழக்கை கையில் எடுத்த சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட சாத்தான்குளத்தில் எஸ்.ஐ-யாக பணியாற்றி தற்போது சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கும் ரகு கணேஷை போலீசார் முதலில் கைது செய்தனர். அடுத்து காவலர் முருகன், இன்னொரு எஸ்.ஐ பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதன்மை குற்றவியல் மாஜிஸ்திரேட் முன்பு எஸ்.ஐ. ரகு கணேஷ் நேற்று இரவு ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் கூறுகையில், சாத்தான்குளத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஸ்ரீதர் சொந்த ஊர் தேனி. அவர் தேனிக்கு செல்லும் ரகசிய தகவல் நள்ளிரவில் எங்களுக்கு கிடைத்தது. உடனடியாக நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் செக்போஸ்டில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை மடக்கி பிடித்தோம். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்றனர்.
காவலர் ரேவதி சாட்சியம்
சாத்தான்குளம் வழக்கில் முதலில் பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரைத் தொடர்ந்து காவல்துறையைச் சேர்ந்த 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனால் ஜெயராஜ் குடும்பத்தினர் முன்வைத்த கோரிக்கையை சிபிசிஐடிபோலீசார் நிறைவேற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார், தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது சாத்தான்குளம் போலீசார் பதிவு செய்திருந்த எப்.ஐ.ஆர் தொடர்பாக முதலில் விசாரணை நடத்தப்பட்டது. எப்.ஐ.ஆரை பதிவு செய்த போலீஸ் அதிகாரி, தன்னுடைய தரப்பு விளக்கத்தை தெரிவித்துள்ளார். விசாரணை முடிவில் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாத்தான்குளம் போலீசாருக்கு எதிராக அதே காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் காவலர் ரேவதி, ஜெயராஜ், பென்னிக்ஸை சாத்தான்குளத்திலிருந்து கோவில்பட்டி சிறைக்கு அழைத்துச் சென்ற டிரைவர், மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை ஆகியவை உள்ளன. இன்னும் சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசாரின் செயல்களை சிசிடிவி காட்டிக் கொடுத்துவிட்டது.சிசிடிவி காட்சிகளுக்கும் எப்ஐஆரில் பதிவு செய்யப்பட்ட தகவல்களுக்கும் முரண்பாடுகள் இருக்கின்றன. அதோடு கோவில்பட்டி சிறைத்துறையினரும் அரசு டாக்டர்களும் அளித்த தகவல்கள் அடிப்படையிலும் விசாரணை நடந்துவருகிறது.
சாத்தான்குளம் வழக்கு அடுத்தடுத்த திருப்பங்களை ஏற்படுத்திவருகிறது!