தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ். இருவரும் போலீசாரின் விசாரணையில் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தில் நீதி கேட்டு நடந்த போராட்டத்தால் சிபிசிஐடி போலீசார், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர் முருகன் என அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
ஒரே இடத்தில் அனைவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அந்தத் தகவல்களை போலீசார் வீடியோவாக பதிவு செய்தனர். பின்னர், தனித்தனியாகவும் விசாரணை நடத்தப்பட்டது. விடிய விடிய நடந்த விசாரணையில் ஜெயராஜ், பென்னிக்ஸிடம் நடந்த விசாரணை குறித்த தகவல்களை சிபிசிஐடி போலீசாரிடம் அனைவரும் கூறியுள்ளனர்.

அதன் அடிப்படையில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையில் சாத்தான்குளம் போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்த தகவல்கள் வெளியானதும் கிராம மக்கள் நள்ளிரவில் பட்டாசுக்களை வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர். அப்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்கான நீதி கிடைத்துள்ளதாக பொதுமக்கள் கோஷமிட்டனர்.