ஈகோ’ தான் எல்லாவற்றுக்கும் காரணம் – பென்னிக்ஸின் நண்பர்கள் என்ன சொன்னார்கள் #Sattankulam custodial deaths

ஜெயராஜ், பென்னிக்ஸ் கடைக்கு போலீசார் வந்து விசாரித்தபோது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அதுவே ஈகோவாக மாறியது. இதுதான் பிரச்சினையை இந்தளவுக்கு விஸ்வரூபமாகிவிட்டது என்று பென்னிக்ஸின் நண்பர்கள் சிபிசிஐடி போலீசாரிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

5 போலீசார் மீது கொலை வழக்கு


தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் இன்று உயிரோடு இல்லை. விசாரணை என்ற பெயரில் அவர்களிடம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜா ஆகியோர் தந்தை, மகனை அடித்து கொலை செய்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


சிபிசிஐடி போலீசார், இந்த வழக்கை கையில் எடுத்தவுடன் அதிரடி ஆக்சனில் களமிறங்கினர். 5 பேர் மீதும் கொலை வழக்கு, ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கைதான 5 பேரும் தூத்துக்குடி சிறையில் அடைக்கப்பட்டனர். பாதுகாப்பு கருதி, மதுரை சிறைக்கு அவர்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளனர்.

கடையில் நண்பர்கள்


அடுத்தக்கட்ட விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர். சம்பவம் நடந்த அன்று பென்னிக்ஸ் கடையில் அவரின் நண்பர்கள் ரவிச்சந்திரன், ரவிசங்கர், மணிமாறன், சங்கரலிங்கம், ராஜராமன் ஆகியோர் இருந்துள்ளனர். முதலில் ஜெயராஜைதான் சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சி பதிவு உள்ளது.


அதன்பிறகு நண்பர் ஒருவரின் பைக்கில் பென்னிக்ஸ் செல்லும் சிசிடிவி காட்சி உள்ளது. பென்னிக்ஸை பைக்கில் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற நண்பரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர், சம்பவத்தன்று ஊரடங்கு விதியை மீறி கடையை திறந்து வைத்திருப்பதாக ஜெயராஜிடமும் பென்னிக்ஸிடமும் சாத்தான்குளம் போலீசார் கூறினர். போலீசாரின் பேச்சு அநாகரிகமாக இருந்தது. அதனால்தான் பென்னிக்ஸிக்கு கோபம் வந்தது. போலீசாருக்கும் ஜெயராஜ், பென்னிக்ஸுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதும் ஜெயராஜை மட்டும் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

உடலில் காயங்கள்


அதன்பிறகு நானும் பென்னிக்ஸிம் பைக்கில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்றோம். வாசலில் பைக்கை விட்டு இறங்கிய பென்னிக்ஸ் உள்ளே சென்றார். பிறகு நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. இரவு முழுவதும் காவல் நிலையத்தில்தான் பென்னிக்ஸ், ஜெயராஜ் இருந்தனர். திடீரென இருவரையும் போலீஸ் கைது செய்யப்போவதாக தகவல் கிடைத்தது. அதற்காக இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது பென்னிக்ஸ், ஜெயராஜ் சோர்வாக காணப்பட்டனர். அவர்களின் உடலில் காயங்கள் இருந்தன. குறிப்பாக புட்டத்தில் காயங்கள் இருந்தன.
பென்னிக்ஸ், ஜெயராஜிடம் என்ன நடந்தது என்று கேட்க கூட போலீசார் எங்களை அனுமதிக்கவில்லை. கோவில்பட்டி சிறைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார்கள். பென்னிக்ஸ், ஜெயராஜ் சம்பவத்தில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் அதிர்ச்சியாகவே உள்ளது. நல்ல நண்பனை இழந்துவிட்டேன் என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார்.

டாக்டரின் மருத்துவ குறிப்பு


பென்னிக்ஸ், ஜெயராஜை போலீசார் அழைத்துச் செல்லும் போது அங்கிருந்தவர்களும் சிபிசிஐடி போலீசாரின் முன் ஆஜராகி தங்களின் வாக்குமூலங்களை பதிவு செய்து வருகின்றனர். அதே நேரத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை மருத்துவ பரிசோதனை செய்த அரசு டாக்டரின் மருத்துவக் குறிப்பில் புட்டத்தில் காயங்கள் இருந்தன. ஆனால் ரத்தக் கசிவு இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


அந்த மருத்துவ குறிப்பு சிபிசிஐடி போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைக்கு வரும்போது ரத்தக் கசிவுகள் இல்லை என்றால் சாத்தான்குளத்திலிருந்து கோவில்பட்டிக்கு காரில் அழைத்துச் செல்லும் வழியில் மீண்டும் தாக்கினார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. அதுதொடர்பாக கார் டிரைவரிடம் ஏற்கெனவே சிபிசிஐடி போலீசார் விசாரித்ததாலும் மீண்டும் அவரிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

பெட்ஷிட் ஆதாரம்


ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் இருவருக்கும் ரத்தக்கசிவு அதிகமாக இருந்ததை உறுதிப்படுத்தும் வகையில் ரத்தக்கறை படிந்த பெட்ஷிட்டை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அந்தப் பெட்ஷிட்டில் இருந்த ரத்த மாதிரிகளை போலீசார் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


அது ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் ரத்த மாதிரிகளா என்ற ஆய்வு முடிவு வந்தபிறகு பெட்ஷிட்டும் இந்த வழக்கில் ஆதாரமாக சேர்க்கப்படவுள்ளது. ஏற்கெனவே ரத்தக்கறைப் படிந்த லத்திகள் இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக உள்ள நிலையில் பெட்ஷிட்டும் அடுத்த ஆதாரமாக மாற உள்ளது.

ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ்


தலைமைக் காவலர் ரேவதி நீதிமன்றத்திலும், சிபிசிஐடி போலீசாரிடமும் கூறிய தகவல்கள் அடிப்படையில் சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ-க்கள், தலைமைக் காவலர், காவலர் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும் திட்டமும் சிபிசிஐடியிடம் உள்ளது.
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸை சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸை சேர்ந்த இருவர் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக போனில் பேசிய ஆடியோ வாட்ஸ்அப்பில் வைரலாகிவந்தது. அதனால் அவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையறிந்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸாகப் பணியாற்றிய 5 பேர் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களிடம் விசாரித்தால் இன்னும் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈகோ, மனஅழுத்தம்


இந்தச் சம்பவத்தில் ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸிக்கும் தொடர்பு இருப்பது ஆதாரங்களுடன் நிரூபணமானால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிசிஐடி போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிபிசிஐடி போலீசாரிடம் கைது செய்யப்பட்ட காவல்துறையைச் சேர்ந்த 5 பேரும் முக்கிய தகவல் ஒன்றைக் குறிப்பிட்டுள்ளனர்.

அதில் மனஅழுத்தம், ஈகோ ஆகியவைதான் விசாரணை கோணத்தை திசைமாற்றிவிட்டதாக கூறியதாக சிபிசிஐடி போலீசார் தெரிவிக்கின்றனர். விசாரணை முடிவில்தான் காவல் நிலையத்துக்குள் என்ன நடந்தது என்பது தெரியவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *