தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருவரையும் போலீஸார் கொடூரமாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதைத் தொடர்ந்து மதுரை உயர் நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கை விசாரித்து வருகிறது. கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன், சாத்தான்குளத்தில் தங்கியிருந்து விசாரித்து வருகிறார். அவர் அண்மையில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்றபோது அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் அவமரியாதையாக நடந்து கொண்டதாகவும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து சாத்தான்குளம் போலீஸ் நிலையம் வருவாய் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு போலீஸ் நிலையம் வருவாய் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.