சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் சிக்கியது தொடர்பான முழுமையான விவரங்கள் கிடைத்துள்ளன.

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் இதுவரை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் ரகுகணேஷ், பால கிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் நீதிமன்றத்தில் தைரியமாக சாட்சியம் அளித்த ரேவதி, நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினார்.
அப்போது அவர் சாத்தான்குளம் நீதிமன்றத்தில் தந்தை மகனான வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸிடம் போலீசார் எப்படியெல்லாம் விசாரைணை நடத்தினார்கள் என்ற விவரங்களைக் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் காவலர் முத்துராஜ் என்ற காவலரை போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர்.

காட்டுப் பகுதியில் பைக்
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புசனூரில் காவலர் முத்துராஜின் பைக் காட்டுப் பகுதியில் அநாதையாக நிற்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக சிபிசிஐடி போலீஸ் டீம் அந்தப்பகுதிக்குச் சென்றனர்.
அங்கு பதுங்கியிருந்த காவலர் முத்துராஜை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்துக்கு போலீசார் அழைத்து வந்து விசாரித்தனர். விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் முத்துராஜ் கூறிய தகவல்களும் வாக்குமூலமாக பெறப்பட்டது.
ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ்
அதன்பிறகு அவருக்கு கொரோனா உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளார். முத்துராஜ் கைதுக்கு அடுத்து சம்பவம் நடந்த தினத்தன்று காவல் நிலையத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸை, ப்ரெண்ட்ஸ் ஆப் போலீசாரும் தாக்கியதாக சமீபத்தில் செல்போன் உரையாடல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
போனில் பேசிய ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ்காரர்களிடம் சிசிபிசிஐடி போலீசார் விசாரித்துவருகின்றனர். விசாரணைக்குப்பிறகு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறப்பு டீம் விசாரணை
முத்துராஜ் கைது குறித்து சிபிசிஐடி போலீஸ் ஐஜி சங்கரிடம் கேட்டதற்கு, “இந்த வழக்கில் ஏற்கெனவே 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். 5-வது நபராக முத்துராஜை தேடி வந்தோம். அவரையும் பிடித்துள்ளோம். அவரிடம் சிறப்பு புலனாய்வு டீம் விசாரித்து வருகிறது. விசாரணைக்குப்பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
ஏற்கெனவே கைதான 4 பேரும் முத்துராஜ் அளித்த தகவல்களும் ஒரே மாதியாக உள்ளது. மேலும் காவலர் ரேவதி யாரெல்லாம் பென்னிஸ்கள், ஜெயராஜை தாக்கினார்கள் என்ற பட்டியலைக் தெரிவித்துள்ளார்.
யாரும் அப்ரூவராகவில்லை
அவர்கள் எப்படியெல்லாம் தாக்கினார்கள் என்ற தகவலையும் கூறியுள்ளார். அதனால் இந்த வழக்கில் யாரும் தப்பிக்க முடியாது. இந்த வழக்கில் அரசியல் தலையீடு இருப்பதாக தகவல்கள் வருகின்றன, அது, உண்மையில்லை. சட்டத்துக்குட்பட்டு நேர்மையாக விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் இதுவரை யாரும் அப்ரூவராக மாறவில்லை” என்றார்.
சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் அழிக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளில் சில சிபிசிஐடி போலீசாருக்கு கிடைத்துள்ளது. அந்த சிசிடிவி காட்சிகளில் பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோர் காவல் நிலையத்துக்குள் செல்வது பதிவாகியுள்ளன, அதைப் போல இருவரையும் வெளியில் அழைத்துச் செல்லும் காட்சிகளும் உள்ளன. அதன்அடிப்படையில் கைதானவர்களிடம் போலீசார் விசாரித்துள்ளனர்.
ரத்தக்கறை லத்தி
அப்போது சிசிடிவியில் இருக்கும் காட்சிகளுக்கும் கைதான காவல் துறையினர் கூறிய தகவல்களும் ஒரே மாதிரியாகவே இருந்துள்ளது.
ஜெயராஜ், பென்னிக்ஸ் விசாரணையினபோது பயன்படுத்தப்பட்ட லத்திகளில் உள்ள ரத்தக்கறைகளிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உடைந்த லத்திகளும் இந்த வழக்கில் ஆதாரமாக சிபிசிஐடி போலீசார் சேகரித்து வைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜிக்கு தூத்துக்குடி மாவட்டம் அரசன்குளம். அதனால் அவர் தலைமறைவாக இருந்தபோது அவரின் சொந்த ஊர் மற்றும் அவரின் குடும்பத்தினரின் செல்போன் சிக்னல்களை சிபிசிஐடி போலீசார் கண்காணித்து வந்தனர். ஆனால் காவலர் முத்துராஜ், யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். அதனால்தான் அவர் பதுங்கியிருக்கும் இடத்தை சிபிசிஐடி போலீசாரால் உடனடியாக கண்டறிய முடியவில்லை. ஆனால் அவரின் பைக் சிக்கிய பிறகுதான் காவலர் முத்துராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.