ஏடிஎம் கொள்ளை வழக்கில் சிக்கிய அமீரின் ஐ போனில் அதிர்ச்சி வீடியோக்கள்

தமிழகம் முழுவதும் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் உள்ள பணம் டெபாசிட் செய்யும் இயந்திரத்திலிருந்து நூதன முறையில் லட்சகணக்கில் பணத்தைக் கொள்ளையடித்த வழக்கில் கைதாயிருக்கும் அமீரின் ஐ போனில் அதிர்ச்சி வீடியோக்கள், தகவல்கள் இருப்பதை போலீஸார் கண்டறிந்திருக்கின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு எஸ்.பி.ஐ ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட அரியானா மாநிலத்தைச் சேர்ந்த அமீர் அர்ஷ், அவரின் நண்பன் வீரேந்தர் ஆகியோர் போலீஸாரிடம் சொன்ன அதிர்ச்சி தகவல்களைச் சொல்லியிருக்கின்றனர்.

ஸ்காட்லாந்து போலீஸாருக்கு நிகரானவர்கள் தமிழக போலீஸார் என்பதை மீண்டும் இந்த வழக்கில் நிரூபணமாகியிருக்கிறது.

ஏடிஎம்
ஏடிஎம்

ஏடிஎம் மையத்தில் உள்ள பணம் டெபாசிட் இயந்திரத்தில் எப்படி கம்ப்யூட்டரை கன்பியூஸ் செய்து பணத்தைக் கொள்ளையடிப்பது என்பதை செய்முறையாக விளக்கம் அளித்திருக்கிறான் அமீர்.இந்தக் கொள்ளை சம்பவத்துக்குப் பின்னணியிலிருக்கும் நெட்வொர்க் குறித்து இந்தச் செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

எஸ்.பி.ஐ ஏடிஎம்

தமிழகம் முழுவதும் உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம் மையங்களில் நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

சென்னை வேளச்சேரி, வளசரவாக்கம், தரமணி, ராயலாநகர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் பணம் கொள்ளை குறித்து சென்னையில் உள்ள சில காவல் நிலையங்களுக்கு புகார்கள் வந்தன.

அதனால் கொள்ளை நடந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸாரும் வங்கி அதிகாரிகளும் ஆய்வு செய்த போது ஒரே ஸ்டைலில் கொள்ளை சம்பவங்கள் நடந்தது தெரியவந்தது.

இதையடுத்து எஸ்.பி.ஐ வங்கி மண்டல அதிகாரி ராதாகிருஷ்ணன், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவாலைச் சந்தித்து புகாரளித்தார்.

அப்போது கொள்ளைச் சம்பவம் குறித்து போலீஸாரும் வங்கி அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர்.

அதன்பிறகு பேட்டியளித்த கமிஷனர் சங்கர் ஜிவால், இந்தக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது வேறுமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார்.

போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால்
பதவி ஏற்கும் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அருகில் மகேஷகுமார் அகர்வால்

இதையடுத்து சென்னை கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையில் அமைக்கப்பட்ட ஸ்பெஷல் டீம் போலீஸார் கொள்ளை குறித்து விசாரித்தனர்.

அப்போது செல்போன் சிக்னல் மூலம் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட அரியானா மாநிலம், மேவாட் மாவட்டம், பல்லக்கபர் பகுதியைச் சேர்ந்த அமீர் அர்ஷ் என்ற இளைஞனை போலீஸார் முதலில் பிடித்து விசாரித்தனர்.

அவன் அளித்த தகவலின்படி அரியானாவைச் சேர்ந்த வீரேந்தர் என்பவரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட அமீர் அர்ஷை போலீஸ் காவலில் எடுத்.த விசாரித்தபோது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

ஏடிஎம் கார்டுகள்

நூதன முறையில் கொள்ளையடிக்க இந்தக் கும்பல் தனியாக பயிற்சி பெற்றதும் கொள்ளையடித்த பணத்தை எப்படி தமிழகத்திலிருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்வது

என பக்கவாக பிளான் போட்டு காரியத்தை கச்சிதமாக முடித்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

கடந்த மாதம் 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை என மூன்று நாள்கள் அரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலிருந்து ஒரு டீம் தமிழகத்துக்கு விமானம், ரயில் மூலம் வந்திருக்கிறது.

அந்த டீம் சென்னையில் உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம் மையங்களில் உள்ள பணம் டெபாசிட் செய்யும் இயந்திரங்கள் குறித்த விவரங்கள் கொண்ட பட்டியலையும் கையோடு கொண்டு வந்திருக்கிறது.

அதன்படி ஒரு குழுவில் இரண்டு பேர் விதம் சென்னை, அதன் சுற்றுவட்டார பகுதியில் பணம் டெபாசிட் செய்யும் வசதியுள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையங்களுக்குச் சென்று கைவரிசை காட்டியிருக்கிறது.

அதற்காக கையோடு ஏராளமான ஏடிஎம் கார்டுகளையும் அந்தக் கும்பல் கொண்டு வந்திருக்கிறது.

பணம் டெபாசிட் செய்யும் இயந்திரத்தில் பணத்தை கார்டு மூலம் எடுக்கும் இந்தக் கும்பல், பணம் வந்தவுடன் இயந்திரத்தில் உள்ள சென்சாரை விரல்கள் மூலம் தடுத்து நூதன முறையில் கொள்ளைச் சம்பவத்தை நடத்தியிருக்கிறது.

சென்சார், தடை செய்யப்பட்டதும் எந்த வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதோ அந்தப் பணம் மீண்டும் அதே வங்கி கணக்கிற்கு திரும்ப சென்றுவிடும் என்ற தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்திதான் இந்தக் கொள்ளை நடந்திருக்கிறது.

போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால், கூடுதல் கமிஷனர் கண்ணன்
போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால், கூடுதல் கமிஷனர் கண்ணன்

இந்தத் தகவலை தெரிந்துகொண்ட கொள்ளை கும்பல் கடந்த மூன்றாண்டுகளுக்கு மேல் இந்தச் சம்பவங்களில் நாடு முழுவதும் ஈடுபட்டு வந்திருக்கிறது.

சென்னைப் போலீஸாரிடம் முதல் தடவையாக அமீர் அர்ஷ் சிக்கிக்கொண்டபிறகுதான் இப்படியொரு கொள்ளை சம்பவம் நடந்தது தெரியவந்திருக்கிறது.

அமீரிடம் விசாரித்தபோது இந்தக் கூட்டத்தின் தலைவனாக ஒருவன் இருப்பது தெரியவந்தது. அமீர் அளித்த தகவலின்படி கொள்ளைக் கும்பலின் தலைவனை போலீஸார் டெல்லியில் முகாமிட்டு தேடிவருகின்றனர்.

ஐ போன்… வீடியோ

சென்னை போலீஸாரின் கஸ்டடியிலிருக்கும் அமீரை எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்று கொள்ளையடிப்பது எப்படி என போலீஸார் விசாரித்தனர்.

அப்போது , பணம் டெபாசிட் செய்யும் இயந்திரத்தில் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பத்தாயிரம் ரூபாயை பணத்தை எடுத்த அமீர், பணம் வந்த சில நொடியில் தன்னுடைய கையால் சென்சாரை மறைத்திருக்கிறான்.

பிறகு இன்னொரு கையால் பணத்தை எடுத்திருக்கிறான். 20 நிமிடங்களுக்கு பிறகு இயந்திரத்தில் பணத்தை எடுக்கக்கூடிய ஷட்டர் தானாகவே மூடியபோது கையை எடுத்திருக்கிறான்.

அப்போது அமீர், பணத்தை எடுத்த வங்கி கணக்கிற்கு முதலில் பணம் எடுத்த பத்தாயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது என எஸ்.எம்எஸ் வந்திருக்கிறது.

அதன்பிறகு வந்த எஸ்எம்எஸ்ஸில் பத்தாயிரம் ரூபாய் மீண்டும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அமீர் அளித்த செய்முறை விளக்கத்தை போலீஸாரும் வங்கி அதிகாரிகளும் வீடியோவாக பதிவு செய்திருக்கின்றனர்.

ஸ்காட்லாந்து போலீஸ்

இதற்கிடையில் அமீரின் விலை உயர்ந்த ஐபோனை போலீஸார் பறிமுதல் செய்து அதிலிருந்து வழக்கிற்கு தேவையான சில ஆதாரங்களை கைப்பற்றியிருக்கின்றனர்.

அந்த ஐ போனில் அமீர், ஆடம்பரமாக வாழ்ந்ததற்கான சில வீடியோக்கள் இருந்தன.

அமீரின் நட்பு வட்டாரங்களை சேகரித்த போலீஸார் அதன் மூலமாகவும் ஏடிஎம் கொள்ளைக் கும்பலை கூண்டோடு பிடிக்க திட்டமிட்டிருக்கின்றனர்.

அமீர் அளித்த தகவலின் அடிப்படையில்தான் அவனின் நண்பனும் ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடைய வீரேந்திரனை போலீஸார் பிடித்திருக்கின்றனர்.

இருவரும் அளித்த தகவலின்படி ஏடிஎம் கொள்ளையில் தொடர்புடைய இன்னும் சிலர் போலீஸாரின் சந்தேக வளையத்துக்குள் உள்ளனர்.

சென்னை கூடுதல் கமிஷனர் கண்ணன், மத்திய உளவுப்பிரிவில் பணியாற்றியவர். அதனால் திறமையாக இந்த வழக்கை விசாரித்து கொள்ளை நடந்த சில தினங்களிலேயே குற்றவாளிகளைப் பிடித்து ஸ்காட்லாந்து போலீஸாருக்கு நிகரானவர்கள் தமிழக போலீஸார் என்பதை நிலைநாட்டப்பட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *