நடிகர் சுஷாந்த் வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சுஷாந்தின் காதலி ரியாவின் வீடியோ வைரலாகிறது.
கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பையில் உள்ள வீட்டில் நடிகர் சுஷாந்த் சிங் (வயது 34) தற்கொலை செய்து கொண்டார்.

எம்.எஸ். தோனி திரைப்படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்த அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று சுஷாந்த் குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சுஷாந்தின் தந்தை புகார்
சுஷாந்த் வழக்கை மும்பை போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் சுஷாந்தின் தந்தை கே.கே. சிங் பீகார் தலைநகர் பாட்னாவில் புதிதாக ஒரு புகாரை அளித்தார்.
அதில் சுஷாந்தின் வங்கிக் கணக்கில் ரூ.15 கோடி பணம் மர்மமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது. அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து பாட்னா போலீஸார் வழக்கு பதிவு செய்து மும்பைக்கு தனிப்படை அனுப்பப்பட்டது. ஆனால் மும்பை போலீஸார், பாட்னா போலீஸாருக்கு உதவி செய்யவில்லை, ஒத்துழைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து சுஷாந்த் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பரிந்துரைத்தார். இதை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது.
நடிகை ரியா வழக்கு
இதற்கிடையில் நடிகர் சுஷாந்தின் காதலியான நடிகை ரியா, சிபிஐ விசாரணைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதி ரிஷிகேஷ் தலைமையிலான அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியது.

பீகார் போலீஸார் பதிவு செய்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றியதில் எவ்வித தவறும் இல்லை. சுஷாந்த் வழக்கை சிபிஐ விசாரிக்கலாம்.
மும்பை போலீஸார் சிபிஐ-க்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதுகுறித்து நடிகை ரியா சக்கரவர்த்தி கூறும்போது, சிபிஐ விசாரணைக்கு பயப்படவில்லை, உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
ரூ.50 கோடி எங்கே?
பீகார் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே நிருபர்களிடம் கூறும்போது, “எங்களது விசாரணையில் கடந்த 4 ஆண்டுகளில் சுஷாந்தின் வங்கிக் கணக்குகளில் இருந்து 50 கோடி பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த வழக்கு விசாரணையில் மும்பை போலீஸார் சட்டவிரோதமாக நடந்து கொண்டனர். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்தார்
.
நடிகை ரியா சக்கரவர்த்தி மிகப்பெரிய நடிகை கிடையாது. கடந்த 4 ஆண்டுகளாக அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.
அவரது ஆண்டு வருமானம் 10 லட்சமாக இருக்கும்போது கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். இந்த பண முறைகேடு குறித்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
தற்போது சுஷாந்த் வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்திருப்பதால் அவரது மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வைரல் வீடியோ
அண்மை காலமாக நடிகை ரியா சக்கரவர்த்தி, தயாரிப்பாளர் மகேஷ் பட்டிடம் மிகவும் நெருங்கி பழகி வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் நடிகை ரியா, மகேஷ் பட்டின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.