புதிய நாடாளுமன்ற வளாகம்… கட்டுமான பணிக்கு தடை விதிக்கப்படுமா?

புதிய நாடாளுமன்ற வளாக கட்டிட பணியை மேற்கொள்ள தடை விதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக டெல்லி ஐகோர்ட்டை அணுகுமாறு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

தற்போதைய நாடாளுமன்றம் கடந்த 1927-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இது 94 ஆண்டுகள் பழமையானது. நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் பல்வேறு அமைச்சகத்தின் அலுவலகங்களில் இடநெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

இதை கருத்தில் கொண்டு புதிய நாடாளுமன்ற வளாகத்தை (சென்ட்ரல் விஸ்டா) கட்ட கடந்த மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டது.

புதிய வளாகத்தில் பிரதமர், குடியரசு துணைத் தலைவரின் இல்லங்களும், பல்வேறு துறைகளுக்கான அலுவலகங்களும் கட்டப்பட உள்ளன.

தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 ஆகும். மாநிலங்களவை உறுப்பினர்கள் 245 பேர் உள்ளனர்.  வரும் 2026-ம் ஆண்டில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளன. அப்போது மக்களவை, மாநிலங்களவை இடங்கள் கணிசமாக உயரும்.

இதையொட்டி  புதிதாக கட்டப்படும் நாடாளுமன்றத்தின் மக்களவையில் 888 இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. கூட்டுக் கூட்டத்தின்போது இருக்கைகளின் எண்ணிக்கையை 1,224 ஆக அதிகரிக்கவும் முடியும்.

மாநிலங்களவையில் 384 இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன.  ஒட்டுமொத்தமாக ரூ.971 கோடி செலவில், 64,500 சதுர மீட்டர் பரப்பளவில், முக்கோண வடிவில்,  42 மீட்டர் உயரத்தில் 3 மாடிகளுடன் புதிய நாடாளுமன்றம் பிரம்மாண்டமாக கட்டப்பட உள்ளது. இது நிலநடுக்கத்தை தாங்கும் வகையில் வலுவாக இருக்கும். 150 ஆண்டுகள் நீடித்து நிலைத்திருக்கும்.

இதனிடையே புதிய நாடாளுமன்ற வளாகம் சுற்றுச்சூழல், நில வகைப்பாடு விதிகளை மீறி கட்டப்படுவதாக குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் 10 வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா அமர்வு விசாரித்தது. உச்ச நீதிமன்றத்தின் அனுமதியின்பேரில் கடந்த டிசம்பர் 10-ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.    

உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த பின்னணியில் கடந்த ஜனவரி 5-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

பெரும்பான்மை நீதிபதிகள் புதிய நாடாளுமன்ற வளாக கட்டிட பணியை மேற்கொள்ள அனுமதி வழங்கினர். ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தார்.

பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்படி புதிய நாடாளுமன்ற வளாகம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கட்டுமான பணிகள் தீவிரமடைந்துள்ளன. வரும் 2022-ம் ஆண்டில் புதிய நாடாளுமன்ற வளாகம் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பின்னணியில் புதிய நாடாளுமன்ற வளாகத்தின் கட்டுமான பணிக்கு தடை விதிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அன்யா மல்ஹோத்ரா, சோகைல் ஹாஸ்மி ஆகியோர் பொதுநல வழக்கை தொடர்ந்தார்.

இந்த வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது எவ்வித உத்தரவையும் பிறப்பிக்காமல் வரும் 17-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த மனு நீதிபதிகள் வினீத் சரண், தினேஷ் மகேஸ்வரி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் ஆஜராகி வாதாடினார்.

அவர் கூறும்போது, “புதிய நாடாளுமன்ற வளாகம் கட்ட உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி வழங்கிவிட்டது. அந்த தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம்.

டெல்லியில் தற்போது கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.

புதிய நாடாளுமன்ற வளாக கட்டுமான பணிக்காக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பலர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

தற்போதைய இக்கட்டான சூழலில் கட்டுமான பணியை தொடர்ந்தால் கட்டுமான தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

டெல்லியில் வைரஸ் பரவல் அதிகரிக்கும். எனவே குறைந்தபட்சம் 6 வாரங்களுக்கு கட்டுமான பணியை தள்ளி வைக்க வேண்டும்.

கரோனா தொற்று குறைந்த பிறகு கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்” என்று வாதிட்டார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, “‘டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுதாரர்கள் பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு தள்ளிவைக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எஸ்.எல்.பி. மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

மனுதாரர்களின் நடவடிக்கை சந்தேகத்தை எழுப்புகிறது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக்கூடாது. இது தவறான முன்னுதாரணமாகிவிடும்” என்று தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறும்போது, “மனுதாரர்கள் தாக்கல் செய்துள்ள எஸ்.எல்.பி. மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

மனுதாரர்கள் டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை அணுகி, வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுகோள் விடுக்கலாம். உயர் நீதிமன்றம் வழக்கை விரைந்து விசாரிக்கும் என நம்புகிறோம்” என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *