உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் மீதான சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த உமேஷ் சர்மா என்பவர், ‘சமச்சார் பிளஸ்’ என்ற பெயரில் செய்தி சேனல் நடத்தி வருகிறார். கடந்த ஜூன் 24-ம் தேதி இவர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் மீது ஊழல் புகார் கூறினார்.
“கடந்த 2016-ம் ஆண்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் பாஜக மேலிட பொறுப்பாளராக திரிவேந்திர சிங் பணியாற்றினார். அப்போது அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்றது. மாநில அரசின் பசு சேவா ஆயோக் தலைவராக அம்ரித்திஷ் சவுகான் என்பவரை நியமிக்க திரிவேந்திர சிங் மறைமுகமாக லஞ்சம் பெற்றார். திரிவேந்திர சிங்கின் மனைவி சுனிதா ராவத்தின் சகோதரி கணவர் ஹரேந்திர ராவத்தின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது” என்று செய்தியாளர் உமேஷ் சர்மா குற்றம் சாட்டினார்.
இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தராகண்ட் ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், சுபாஷ் ரெட்டி, எம்.ஆர். ஷா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தராகண்ட் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.
இதுகுறித்து நீதிபதிகள் கூறும்போது, “குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் எவ்வித விளக்கமும் கோராமல் சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்கிறோம்” என்று தெரிவித்தனர்.
இதனிடையே முதல்வர் திரிவேந்திர சிங்கின் உறவினர் ஹரேந்திர ராவத் கூறும்போது, “எனக்கும் எனது மனைவிக்கும் அலுவலகரீதியாக முதல்வரோடு எவ்வித தொடர்பும் கிடையாது. என் மீது அபாண்டமாக பழி சுமத்தப்பட்டுள்ளது. என் மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய உமேஷ் சர்மா மீது அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்” என்று தெரிவித்தார்.