பிடித்த டீச்சர் யாரு? – அமைச்சர் அன்பில் மகேஷிடம் கேள்வி கேட்ட மாணவிகள்

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் திருச்சி மாணவ, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு அதிரடியாக பதிலளித்தார். அப்போது மாணவி ஒருவர் உங்களுக்கு பிடித்த டீச்சர் யாரு என்று கேட்டதற்கு 2-ம் வகுப்பு டீச்சர் எனக் கூறினார்.

அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி

உலக குழந்தைகள் தினத்தையொட்டி திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் பரிசுகளை வழங்கினார். பின்னர் மாணவ, மாணவிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துரையாடினார். அப்போது மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்தார்.

மாணவிகள் உங்களுக்கு பிடித்த ஆசிரியர் யார் என்று கேட்டனர். இன்னும் சிலர், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் ஆல் பாஸ் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் எதிர்காலத்தில் அதாவது உயர்கல்வியில் பாதிப்பு ஏற்படுமா என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், கொரோனா தொற்று காரணமாக பொது தேர்வை நடத்த முடியவில்லை. அதனால் அனைவரும் ஆல்பாஸ் என்று குறிப்பிட்டுள்ளோம். அதனால் பாதிப்பு ஏற்படாது. உங்களுக்கு பிடித்த டீச்சர் யாரென்று என்ற கேள்விக்கு நான், 2ம் வகுப்பு படித்தபோது ஒரு டீச்சரைப் பிடிக்கும். ஆனால் அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என்றார்.

மாணவர்களுடன் கலந்துரையாடும் அமைச்சர் அன்பில் மகேஷ்
பள்ளி மாணவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் (கோப்பு படம்)

இதையடுத்து இன்னொரு மாணவி, இந்தக் கல்வியாண்டில் பொதுதேர்வு நடத்தப்படுமா என்று கேட்டார். அதற்கு அமைச்சர், 10, 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு நிச்சயமாக மார்ச் மாதத்தில் பொதுதேர்வு நடத்தப்படும். அதைப்போல திட்டமிட்டப்படி டிசம்பரில் அரையாண்டு தேர்வு நடக்கும். எந்தவித சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம். நன்றாக படியுங்கள் என்று கூறினார்.

இதையடுத்து நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்று மாணவி ஒருவர் கேட்டதும், உங்கள் கவனம் எல்லாம் படிப்பில் இருக்க வேண்டும் படித்த பிறகு என்னவாக வேண்டும் என்பதை நீங்களே முடிவெடுங்கள் என்று பதிலளித்தார். அமைச்சருடன் மாணவ, மாணவிகள் கலந்துரையாடிய நிகழ்ச்சியை கலெக்டர் சிவராசு உள்ளிட்ட அதிகாரிகள் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *